வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

பாலிதீன் பைகளுக்கு மாற்றாக புழக்கத்திலுள்ள பையும் தடை செய்யப்பட்டதே!

By சா. ஜெயப்பிரகாஷ்| DIN | Published: 12th September 2018 08:05 AM

பிளாஸ்டிக்  இல்லா தமிழ்நாடு என்ற முழக்கம் வருவதற்கு முன்பே பாலிதீன் பைகளுக்கு மாற்றாக நம்மிடையே புழக்கத்துக்கு வந்துவிட்டிருக்கும்  "நான் ஓவன் பாலிபுரோபைலின்'  பைகளும் தற்போதைய தடைப் பட்டியலில் உள்ளது.   ஆனால்,  இதுகுறித்த முழுமையான விழிப்புணர்வின்மையால் பொதுமக்கள் பலரும் இந்த வகையான "பிபி' பைகளை மிக ஆர்வமாகப் பயன்படுத்தி வருகிறோம்.
பெட்ரோலியப் பொருள்களில் ஒன்றாக அண்மைக் காலமாக நம்மிடையே புகுந்து மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வருவது பாலிதீன் பைகள்.  கடைவீதிக்கு கைவீசிச் சென்று பொருள்களை வாங்கி,  நாகரீகமாகக் கருதி பாலிதீன் பைகளில் போட்டு எடுத்து வரும் கலாசாரம் பெருகிவிட்டிருக்கிறது.  ஒரு முறைப் பயன்படுத்தித் தூக்கியெறியும் நவீன எண்ணங்களின் விளைவாக பிளாஸ்டிக் பொருள்கள் ஏராளம் நம்மைச் சுற்றி ஆக்கிரமித்திருக்கின்றன.
மண்ணுக்கும்,  மனிதனுக்கு பெரும் கேட்டை விளைவிக்கும் என்று தொடர்ந்து வெளிவந்த ஆய்வுகளுக்குப் பிறகு,  தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வந்த குரல்களுக்குப் பிறகு, வரும் 2019 ஜன. 1ஆம் தேதி முதல் "பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' என்ற முழக்கத்தை தமிழக அரசே முன்வைத்திருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக கடந்த ஒரு மாதமாக தீவிர பிரசாரங்களும் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.  தடை செய்யப்படும் பொருள்களின் பட்டியல் மீண்டும் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு,  இறுதியாக 14 பொருள்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.
பட்டியலின் கடைசியாக இருக்கும்  "நான் ஓவன் பாலிபுரோபைலின்' பைகள் வேறெதுவும் இல்லை.  இந்தத் தடை போன்ற விழிப்புணர்வுக்கு முன்பே பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக நம்மை ஏமாற்றி நம்முள் திணிக்கப்பட்ட பைகள்தாம். திருமண விழாக்களில் பலரும் பாலிதீன் பைகளைத் தவிர்க்கிறேன் என்ற பெயரில் இந்தப் பைகளில்தான் தாம்பூலம் வழங்குகிறார்கள்.  வண்ண வண்ணமாக மட்டுமின்றி, கவர்ச்சிகரமாக கைப்பிடிகள்- விழிப்புணர்வு அச்சுகள் என "பிபி' பைகள் சரளமான புழக்கத்தில் இருக்கின்றன.
"பிபி' பைகள் இன்னும் சில முறை திரும்பப் பயன்படுத்த முடியும் என்பதைத் தவிர,  பாலிதீன் பைகளுக்கு இணையான மறுசுழற்சி கேடுகள் அத்தனையும் உண்டு என்கிறார்கள் சூழலியலாளர்கள். தடை குறித்த விழிப்புணர்வுப் பணிகள் தொடங்கிய பிறகு பல இடங்களில் பாலிதீன் பைகளுக்கு மாற்றாக இந்த வகை "பிபி' பைகள் அரசு நிறுவனங்களாலேயே முன் வைக்கப்பட்டன.  ஆனால்,  மிக அண்மையில்தான் அரசு அலுவலர்களுக்கே விழிப்புணர்வு ஏற்பட்டு, "பிபி' பைகளும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. 
ஆனால், பொதுமக்களின் புழக்கத்தில் "பிபி' பைகள் மீது ஏற்பட்டிருக்கிற மோகம் குறைய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்.  அதேநேரத்தில் கண்டிப்பாக புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் சூழலியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள். 

More from the section

அரசுப் பணியாளர்களுக்கு நாளை மாநில வாலிபால் தேர்வு போட்டி
தருமபுரி மாவட்டத்தில் 3,250 ஹெக்டரில் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு: வேளாண் இணை இயக்குநர்
சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பிப்.25-இல் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் தேர்த் திருவிழா
எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: மாவட்ட வருவாய் அலுவலரிடம் விவசாயிகள் மனு