திங்கள்கிழமை 25 மார்ச் 2019

பெரியாம்பட்டியில் ரூ.2.25 கோடியில் பள்ளிக் கட்டடம் கட்டும் பணி தொடக்கம்

DIN | Published: 22nd February 2019 09:46 AM

தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ரூ.2.25 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் நடைபெற்ற விழாவில், மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து பேசியது: தமிழக அரசு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துகிறது. தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது. பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்துக்காக 2019-2020-ஆம் ஆண்டுக்கு ரூ.140.11 கோடி, திருமண உதவித்தொகை திட்டத்துக்காக ரூ.726.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டில் திருமண நிதி உதவித் திட்டங்களை செயல்படுத்த ரூ.726 கோடியே 32 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சமூக நலத் துறைக்கு ரூ.5 ஆயிரத்து 305 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அருகாமையிலுள்ள மாநிலங்களில் மடிக்கணினி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, ஓராண்டு மட்டுமே செயல்படுத்த முடிந்தது. ஆனால், தமிழகத்தில் திட்டம் அறிவித்து 8 ஆண்டுகளாக தொடர்ந்து மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
தாலிக்குத் தங்கம் அளிப்பு: இதைத் தொடர்ந்து, பாலக்கோடு, காரிமங்கலம் மற்றும் பென்னாகரத்தில் சமூக நலத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், 1,041 பேருக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித் தொகை, 233 பேருக்கு ரூ.2.80 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.
இவ் விழாவில் பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர்கள் தியாகராஜன், சக்திவேல், சமூக நல அலுவலர் (பொ) கு.நாகலட்சுமி, உதவி பொறியாளர் ராமச்சந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி, வட்டாட்சியர் கேசவமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ரமணன், வடிவேலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

More from the section

தருமபுரி உழவர் சந்தையில் ஸ்டாலின் வாக்குச் சேகரிப்பு
ஊத்தங்கரை அருகே ஊர்த் திருவிழாவில் மோதல்: ஒருவர் பலி: 3 பேர் கைது
வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 3 பேர் கைது; துப்பாக்கி பறிமுதல்
அரசுப் பள்ளிக்கு கல்வி சீர் வரிசை
கம்பைநல்லூர்சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்