சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

தருமபுரியில் அரசு மழலையர் வகுப்புகள் தொடக்கம்

DIN | Published: 22nd January 2019 08:45 AM

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் மழலையர் வகுப்புகள் (எல்கேஜி,  யுகேஜி) திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. 
பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்,  மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்,  மழலையர் வகுப்புகளை தொடங்கி வைத்து பேசியது:  தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறைகளில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதால் இந்திய அளவில் தமிழகம் முன்னோடியான இடத்தில் உள்ளது. 32 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் தொடங்கிட, பேரவையில் முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார்.
 அதனடிப்படையில், தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாதிரிப்பள்ளியாகத் தேர்வு செய்யப்பட்டது. பள்ளிக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, கல்விக் கற்பிக்கும் தரத்தை மேலும் உயர்த்தும் வகையில், வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப உயர்தொழில்நுட்பக் கணினி ஆய்வகம், திறன் வகுப்பறை, முழுமையான உபகரணங்கள் கொண்ட ஆய்வகம்,  சோலார் விளக்குகள்,  கண்காணிப்பு கேமராக்கள், வகுப்பறைகளில் கண்ணாடிஇழையிலான கரும்பலகைகள், மாணவர்களுக்கு நவீன வசதியுடன் கூடிய விளையாட்டுத் திடல், நுண்கலை திறன் வளர்ப்பதற்கான வசதிகள் மற்றும் பள்ளிக் கட்டடங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திட ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல் இரண்டாம் வகுப்பு வரை 242 குழந்தைகள் சேர்ந்துள்ளனர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ள எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் ஆங்கில வழியிலும், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2  வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியிலும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. தமிழகத்தில் 2,381 அங்கன்வாடி மையங்களில் ஆங்கில வழி கல்விக் கற்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், தருமபுரி மாவட்டத்தில் 72 அங்கன்வாடி மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அங்கன்வாடி மைய அமைப்பாளர்களுக்கு அறிதிறன் பேசி வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள செயலி வழியாக ஆங்கிலப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு கல்வி செயல்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கான பாடங்கள், பயிற்சிகள்,  போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய கல்வி தொலைக்காட்சி தொடங்கப்படவுள்ளது.  இதை மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொண்டு கல்வி அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
 இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லாகான், சார் -ஆட்சியர் ம.ப.சிவன் அருள், முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் காளிதாசன், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், வட்டாட்சியர் பிரசன்னமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

More from the section

நிறுத்திவைப்பை அறியாமல் நேர்காணலுக்கு வந்த விண்ணப்பதாரர்கள்  
காணொலி மூலம் விளையாட்டு விடுதி, பள்ளிக் கட்டடம் திறப்பு
தீர்த்தமலையில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்
சென்றாயம்பட்டியில் குடிநீர்த் தட்டுப்பாடு
"காங்கிரஸ் ஆட்சிக்கால நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்'