வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

வெவ்வேறு விபத்து வழக்குகளில் இழப்பீடு வழங்காததால் 6 அரசுப் பேருந்துகள் ஜப்தி

DIN | Published: 22nd January 2019 08:44 AM

தருமபுரியில் மூன்று வெவ்வேறு விபத்து வழக்குகளில்,  இழப்பீடு வழங்காததால், 6 அரசுப் பேருந்துகள் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள நல்லம்பட்டியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர், கடந்த 2014- ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி சர்க்கரை ஆலை பகுதியில் உள்ள சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, எதிரே ஒசூரிலிருந்து வந்த அரசுப் பேருந்து அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கன்னியப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து, தொடர்பாக இழப்பீடு வழங்கக் கோரி, அவரது குடும்பத்தினர், தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ் வழக்கில்,  2017 - இல் தீர்ப்பளித்த நீதிபதி,  விபத்து வழக்கில்  மனுதாரருக்கு, அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீடாக  ரூ.8 லட்சத்து 73 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். 
இருப்பினும், இழப்பீடு வழங்கப்படாததால்,  மனுதாரர் தரப்பில் நிறைவேற்று  மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து,  விபத்து வழக்கில், வட்டியுடன் ரூ.11 லட்சத்து 3 ஆயிரத்து 688 இழப்பீடாக வழங்க வேண்டும்.  தவறினால், இரண்டு அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்யலாம் என நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, இழப்பீடு வழங்காததால், தருமபுரி பேருந்து நிலையத்தில், நின்றிருந்த 2 அரசுப் பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
இதேபோல,  கடந்த 2014 ஏப்ரல் மாதம் தொப்பூர் சோதனைச் சாவடி அருகே,  தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த மாது என்பவரின் மனைவி பூங்கொடி (55) என்பவர் மீது,  தருமபுரியிலிருந்து சேலம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியது. 
இவ்விபத்தில் பூங்கொடி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதில், உயிரிழந்த பூங்கொடியின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில்,  தருமபுரி நீதிமன்றம் இந்த  விபத்து வழக்கில், இழப்பீடாக ரூ.9 லட்சத்து 36 ஆயிரத்து 960 வழங்க வேண்டும். தவறினால், இரண்டு அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
இதேபோல, பாலக்கோடு அருகே அண்ணாமலைஹள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த மாதம்மாள் என்பவர், கடந்த 2016 ஏப்ரல் மாதம் நகரப் பேருந்திலிருந்து இறங்கும்போது, பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இவ் விபத்து, வழக்கில் இழப்பீடாக ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 849 அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும்.  தவறினால், இரண்டு அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்யலாம் என தருமபுரி நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இதைத் தொடர்ந்து, இந்த இரண்டு வழக்கிலும், தருமபுரி பேருந்து நிலையத்தில் வெவ்வேறு பகுதிகளுக்கு செல்லவிருந்து 4 பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன. தருமபுரி பேருந்து நிலையத்தில் ஒரே நாளில் மொத்தம் 6 பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from the section

பெரியாம்பட்டியில் ரூ.2.25 கோடியில் பள்ளிக் கட்டடம் கட்டும் பணி தொடக்கம்
இளம் வயதில் திருமணம் செய்யக் கூடாது: ஆட்சியர் சு.மலர்விழி
ஜெருசலம் பயணத்துக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
பிப்ரவரி 22 மின்தடை
விபத்துக்குள்ளான வேனில் இருந்த புகையிலைப் பொருள்கள் பறிமுதல்