புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

மொரப்பூர் பகுதியில் நீர்பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா?

DIN | Published: 21st March 2019 09:27 AM

அரூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மொரப்பூர் வட்டாரப் பகுதிகளில் நீர்பாசனத் திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர், மொரப்பூர், அரூர் வட்டாரப் பகுதிகளில் போதிய அளவில் நீர் ஆதாரங்கள் இல்லை. இந்தப் பகுதிகளிலுள்ள பெரும்பாலான மக்கள் விவசாயிகள். இங்கு விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். ஆண்டுதோறும் பருவமழை பொய்த்து போவதாலும், போதிய தொழில் வளர்ச்சி இல்லாத நிலையில், அரூர் சட்டப் பேரவைத் தொகுதியிலுள்ள மக்கள் பெங்களூரு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு வேலைத் தேடி செல்லும் நிலையுள்ளது.
இங்குள்ள மக்கள் வெளியூர் செல்வதைத் தடுக்கும் நோக்கில் அரசு சார்பில் சிறப்புத் திட்டங்கள் ஏதும் ஏற்படுத்தப்படவில்லை என்பது வாக்காளர்கள் மத்தியில் பெரும் குறையாகவே உள்ளது.
நீர்பாசனத் திட்டங்கள்
அவசியம்: மொரப்பூர் வட்டாரப் பகுதியில் முன்னாள் தமிழக முதல்வர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர். ஆட்சிகளுக்குப் பிறகு  நீர்பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. மொரப்பூர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தப் பகுதிகளில் ஆயிரம் அடிக்கு கீழ் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தால்கூட தண்ணீர் கிடைக்காத நிலையுள்ளது. 
இந்த நிலையில், கம்பைநல்லூர் அருகே கே. ஈச்சம்பாடி அணைக்கட்டுவின் வலதுபுற கால்வாயை மொரப்பூர் வரையிலும் நீட்டிப்பு செய்ய வேண்டும் என அப் பகுதியிலுள்ள விவசாயிகள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி
வருகின்றனர்.
அதேபோல், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. நீர்த்தேக்க கால்வாயை நீட்டிப்பு செய்து கடத்தூர், கம்பைநல்லூர், மொரப்பூர், சிந்தல்பாடி மற்றும் அரூர் பகுதியில் விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் நீர்பாசன திட்டங்களை ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
தொடர் மழைக் காலங்களில் தென் பெண்ணை ஆற்றில் அதிக அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மழைநீர் வீணாகி கடலில் கலக்கிறது. வீணாகும் நீரை சேமிக்க அதிக அளவில் தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணைகளை உருவாக்க வேண்டும்.  தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள கால்வாய்கள் வழியாக உபரி நீரை விவசாயத்துக்கு பயன்படும் வகையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேடான பகுதிகளாக இருந்தால், ஆற்றில் ஓடும் உபரிநீரை மின் மோட்டார்கள் வழியாக தண்ணீர் எடுத்துச் சென்று ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்ப வேண்டும்  என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
 

More from the section

சாலை பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம்: மே 1-இல் தொடக்கம்
கட்செவி அஞ்சலில் அவதூறு: இருவர் கைது
சுகாதார வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்
ஒகேனக்கல்லில் மதுப்புட்டிகளை கடத்திய இளைஞர் கைது