20 ஜனவரி 2019

வியர்வையாக ரத்தம் வெளியேறும் அரிய நோயால் சிறுமி பாதிப்பு

DIN | Published: 12th September 2018 08:09 AM

வேப்பனஅள்ளி அருகே கூலித் தொழிலாளியின் மகள், வியர்வையாக  ரத்தம் வெளியேறும் அரிய நோயினால் அவதிக்குள்ளாகி வருகிறார். 
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளியை அடுத்த,  கங்கோஜிகொத்தூர் அருகே உள்ள ஜெகநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நாகராஜ் - லட்சுமி தேவி தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவரகளது மூத்த மகள் அர்ச்சனா,  அங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில்,  அர்ச்சனாவுக்கு கடந்த ஜூலை மாதம்  மூக்கிலிருந்து ரத்தம் அதிக அளவில் வெளியேறியது. இதையடுத்து கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 
இதையடுத்து, சில நாள்களில் அவரது உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது போல ரத்தம் வெளியேறியது.  இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அர்ச்சனாவை,  ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால், அவர் குணமடையவில்லை. 
இந்த நிலையில், அர்ச்சனாவின் சிகிச்சைக்கு உதவும்படி மாவட்ட ஆட்சியரிடம், சிறுமியின் பெற்றோர் மனு அளித்தனர். இதையடுத்து, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்க அரசு மருத்துவர்களுக்கு ஆட்சியர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டார். தற்போது, சிறுமி அர்ச்சனா, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில்  சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். 
இதுகுறித்து மாவட்ட நலப்பணிகளின் இணை இயக்குநர் அசோக்குமார், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் செல்வி, மது ஆகியோர் தெரிவித்தது: அர்ச்சனாவின் உடலில் இருந்த திங்கள்கிழமை மட்டும் 4 முறை ரத்தம் வெளியேறி உள்ளது. இது மருத்துவத் துறையில் அரிதானது. த்ரோபாஸ்டினியா எனப்படும் ரத்த ஒழுங்கின்மையின் காரணமாக ஏற்படும் ரத்தப் போக்காக இருக்கக் கூடும் என சந்தேகம் உள்ளது. இதுகுறித்த ஆய்வுகள் மேற்கொள்ள சிறுமியை, சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சகிச்சை பெற பரிந்துரை செய்ய உள்ளோம்.  அங்கு, குருதியியல் வல்லுநர்கள், சிறுமி உடலில் உள்ள ரத்தத்தின் இயற்கை மற்றும் அதன் நோய்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு சிகிச்சை அளிப்பார்கள். சிறுமியின் உடலில் இருந்த ரத்தம் வெளியேறினாலும், அவரது உடலில் உள்ள ரத்தத்தின் அளவு சீராகவும் அவர் நலமுடனும் உள்ளார் என்றனர்.

More from the section

அஞ்செட்டி அருகேநீர்தேக்கத் தொட்டியில் விஷம் கலப்பு?
விவசாயத் தொழிலாளர்களுக்கான மத்தியச் சட்டத்தை உருவாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
காலி குடங்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
தேவிரஅள்ளி பள்ளியில் கூடுதல் வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் அவதி
நண்பரைக் கொலை செய்த வழக்கில் இளைஞர் கைது