24 மார்ச் 2019

எருது விடும் விழா: விலங்குகள் நல வாரிய ஒருங்கிணைப்பாளர் ஆய்வு

DIN | Published: 22nd February 2019 09:43 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொண்டாடப்படும் எருது விடும் விழா குறித்து, இந்திய விலங்குகள் நல வாரிய ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.மிட்டல் தலைமையில் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தலைமை வகித்தார்.
இதில் இந்திய விலங்கின நல வாரிய ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.மிட்டல் பேசியது: உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியே எருது விடும் விழாக்களை நடத்த வேண்டும். இந்த விழாக்களில் பங்கேற்கும் எருதுகளை மருத்துவப் பரிசோதனை செய்யும் இடம், எருது ஓடும் இடம், எருதுகள் சேகரிக்கும் இடம் ஆகிய பகுதிகளில் தடுப்பரண்களை அமைக்க வேண்டும். 
எருது விடும் விழாவுக்கு அழைத்து வரப்படும் எருதுகள், சம்பந்தப்பட்ட கிராமத்தின் கால்நடை மருத்துவரிடம் உடல் தகுதிச் சான்று கட்டாயம் பெற்று வர வேண்டும். எருதுகள் ஓடும் பகுதியில் மனிதர்களின் நடமாட்டம் இல்லாமல் காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும். 
மேலும், காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை, ஆயத்தீர்வைத் துறை ஆகிய அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து, உச்சநீதிமன்ற நெறிமுறைகளைக் கடைப்பிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.  
முன்னதாக, கிருஷ்ணகிரி மாவட்டம், கண்ணன்டஅள்ளியில் நடைபெற்ற எருது விடும் விழாவையும், மகாதேவகொல்லஅள்ளியில் பிப். 22-ஆம் தேதி நடைபெறும் எருது விழாவுக்கான முன்னேற்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது, ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் அயூப்கான், வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணன், விமல்ராஜ், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் மனோகரன் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

More from the section

போச்சம்பள்ளியில் முதல்வருக்கு வரவேற்பு
ஒசூர் அருகே குட்டையில் மூழ்கி சிறுமி, 2 சிறுவர்கள் சாவு
கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அ.செல்லகுமார் போட்டி
பாரத் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா