செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

ஒசூரில் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அசோக் லேலண்ட் காலை உணவு திட்டம் தொடக்கம்

DIN | Published: 22nd January 2019 08:49 AM

அசோக் லேலண்ட் நிறுவனம்,  அக்ஷய பாத்ரா அறக்கட்டளையுடன் இணைந்து சாலையில் இருந்து பள்ளிக்கு என்ற திட்டத்தின்படி சூளகிரி மற்றும் தளி பகுதியைச் சேர்ந்த 70 அரசுப் பள்ளிகளில் பயிலும் 7,800 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
இத் திட்டதொடக்க விழா சூளகிரியில் உள்ள சாமனப்பள்ளி பள்ளியில் நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர்  எஸ். பிரபாகர் இத்திட்டத்தை தொடக்கி வைத்தார். அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு மற்றும் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வின் மனித வளத் துறைத் தலைவர் என்.வி.பாலசந்தர்,  அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் மனித வளத் துறை துணைத் தலைவர்  டி. சசிகுமார், மாவட்ட முதன்மைக்  கல்வி அதிகாரி மகேஸ்வரி ஆகியோர்
பங்கேற்றனர்.
அசோக் லேலண்டின் காலை உணவுத் திட்டம் பற்றி ஆட்சியர் ,  எஸ். பிரபாகர் பேசுகையில்,  அசோக் லேலண்ட் நிறுவனத்தின் காலை உணவுத் திட்டம்  ஒரு அருமையான முயற்சி. இத்திட்டம்  அரசுப்பள்ளி மாணவர்களை பள்ளிக்குத் தொடர்ந்து கல்வி கற்க வருவதை ஊக்குவிக்கும்.  இது போன்ற சமூகப்பொறுப்புணர்வு சார்ந்த முயற்சிகள் மேலும் அதிகளவில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதை மாவட்டம் முழுவதும் விரிவுப்படுத்தப்படவேண்டும் என்றார்.
சூளகிரி மற்றும் தளி பகுதிகளில் 36 பள்ளிகளில் 2015-ஆம் ஆண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2016-ஆம் ஆண்டில் தளி,  புழல்  மற்றும் எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தைச் சுற்றியுள்ள மீஞ்சூர் பகுதியில்  72 பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டது.
 2017-ஆம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 45 பள்ளிகளில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. மேலும், 2018-ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 102 பள்ளிகளுக்கும்,  சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள 80 பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை அசோக் லேலண்ட் நிறுவனம் விரிவுபடுத்தியது. 
ஒட்டுமொத்தமாக 333 பள்ளிகளில் படிக்கும் 31,846 மாணவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

More from the section


எச்.ஐ.வி. விழிப்புணர்வு மீம்ஸ் படைப்பாளிகளுக்கு ஆட்சியர் பாராட்டு

பெண்ணுக்கு வரதட்சிணைக் கொடுமை: கணவர் உள்பட 4 பேர் மீது புகார்


தொலைத் தொடர்புத் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

கரும்பு விவசாயி மீது தாக்குதல்: இருபிரிவினரிடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு
பர்கூர், ஜிஞ்சம்பட்டியில் ரூ.4.03 கோடியில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்