வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

கோகுல்ராஜ் கொலை வழக்கு: கல்லூரி தோழி சுவாதி சாட்சியம் அளித்தார்

DIN | Published: 11th September 2018 09:32 AM

கோகுல்ராஜ் கொலை வழக்குத் தொடர்பாக அவரது கல்லூரித் தோழி சுவாதி, நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சாட்சியம் அளித்தார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.எச். இளவழகன் உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். தலித் இளைஞரான இவர், கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி பள்ளிபாளையம் அருகே கிழக்குத் தொட்டிப்பாளையம் ரயில் பாதையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக திருச்செங்கோடு போலீஸார் சேலம் மாவட்டம்,  சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் எஸ். யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக 110 பேர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில்,  கடந்த 30-ஆம் தேதி முதல் சாட்சி விசாரணை நடைபெற்று வருகிறது.  கோகுல்ராஜ் தாய் சித்ரா, பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ். ரயில் நிலைய அலுவலர் கைலாஷ் சந்த் மீனா,  கோகுல்ராஜ் சகோதரர் கலைச்செல்வன் ஆகியோர் விசாரணை நீதிமன்றமான நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளனர்.  இவர்களிடம் யுவராஜ் தரப்பு வழக்குரைஞர் குறுக்கு விசாரணை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில்,  இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 15 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜோதிமணி அவரது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  பிணையில் வெளியில் வந்த அமுதரசு என்பவர் தலைமறைவாக உள்ளார்.
விசாரணை காலை 12.30 மணிக்குத் தொடங்கியது.  கோகுல்ராஜின் கல்லூரித் தோழி சுவாதி சாட்சியம் அளித்தார்.  சுமார் 3 மணி நேரம் அவரிடம் அரசுத் தரப்பு வழக்குரைஞர் பி. கருணாநிதி கேள்விகளைக் கேட்டுப் பதில் பெற்றார்.  அப்போது நீதிமன்றத்தின் அருகில் செய்தியாளர்கள் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை.  மேலும்,  நீதிமன்றத்தின் உள்ளே வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பு மற்றும் யுவராஜ் தரப்பு வழக்குரைஞர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.  இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 18- ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
 

More from the section

பரமத்தி வேலூர் அருகே லாரி மோதியதில் தொழிலாளி பலி
நாளை பேட்டை பஞ்சமுக விநாயகர், புதுமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் ரூ.200 நோட்டுகளை செலுத்த முடியாததால் வாடிக்கையாளர்கள் அவதி
கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதியைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை
ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்