வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

661 மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: ஆட்சியர் ஆய்வு

DIN | Published: 24th February 2019 03:36 AM


வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமை, மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில்  661 சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல்,  நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன.  நல்லிபாளையத்தில் உள்ள  நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர்  மு.ஆசியா மரியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த முகாமில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருந்ததையும், பெயர் சேர்த்தல்,  நீக்கல்,  திருத்தம்,  முகவரி மாற்றத்திற்கான படிவங்கள் தேவையான அளவு உள்ளதா என்றும் கேட்டறிந்தார். மேலும் பெயர் சேர்ப்பதற்காக வாக்குச்சாவடி மையத்துக்கு வந்திருந்த விண்ணப்பதாரர்களின் படிவங்களை பார்வையிட்டார்.  விண்ணப்பதாரரிடம் வயது,  முகாம் நடைபெறுவது குறித்து கேட்டறிந்தார். அதற்கு விண்ணப்பதாரர் தான் விமானப்படையில் சேர்ந்து பயிற்சி பெற்று வருவதாகவும், தற்போது விடுமுறையில் வந்தபோது தெரிந்து கொண்டதாகவும் கூறினார். தொடர்ந்து  அங்கிருந்த இளைஞர்களிடம் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார். 
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் 31-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.  அதன் தொடர்ச்சியாக வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப் பணிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நடைபெறுகின்றன.  இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவுசெய்து கொள்ளாதவர்களும், 18 வயதுபூர்த்திடைந்த இளம் வாக்காளர்களும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள ஏதுவாக படிவம்- 6 சேர்க்கை விண்ணப்பங்களை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் அளித்து பதிவு செய்துகொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டை பெற்றிட ஏதுவாக, நாமக்கல்,  சேந்தமங்கலம்,  ராசிபுரம்,  கொல்லிமலை, பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், நாமக்கல் மாவட்டஆட்சியர் அலுவலக தரைத்தளத்திலும் அரசு இ - சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. வாக்காளர்கள் தங்களின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டைகளை உரியகட்டணமாக ரூ.25-ஐ செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வின்போது நாமக்கல் சார்- ஆட்சியர் சு.கிராந்தி குமார் பதி, நாமக்கல் வட்டாட்சியர் சி.செந்தில்குமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

More from the section

காவலர்களை தாக்கியதாக இருவர் கைது
200 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு
சுயேச்சை வேட்பாளர் நூதன பிரசாரம்
திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் அறிவுத்திறன் தேர்வு


தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 7 லட்சம் திருட்டு