21 ஏப்ரல் 2019

சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர் மனு

DIN | Published: 20th March 2019 09:42 AM

சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர் எம்.அகமது ஷாஜகான் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சேலம் மக்களவைத் தொகுதிக்கு வேட்பு மனுக்கள் செவ்வாய்க்கிழமை முதல் பெறப்பட்டு வருகின்றன.
சேலம் மக்களவைத் தொகுதிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்தில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ரோகிணி ராம்தாஸ் மற்றும் எம்.ஜி.சரவணன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ஆகியோரிடம் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுக்கள் மார்ச் 19, 20, 21, 22, 25, 26 ஆகிய 6 நாள்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பெறப்படும். வேட்பு மனு (படிவம் 2 ஏ), உறுதி மொழிப் படிவம், படிவம் 26 அபிடவிட் படிவம், சுய விவரங்கள் குறித்த படிவம், வேட்பாளரின் மாதிரி கையொப்பத்துக்கான படிவம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஆகியவைகளை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 3 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்துக்குள் வேட்பு மனு தாக்கல் செய்பவர் மற்றும் அவருடன் நான்கு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
வேட்பு மனுவினை வேட்பாளரோ அல்லது முன்மொழிபவரோ தாக்கல் செய்யலாம். வேட்புமனு கட்டணமாக ரூ.25,000 ரொக்கமாக, ஆர்.பி.ஐ., கருவூல சலான் மூலமாக செலுத்தலாம். (வேட்பாளர் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியின வகுப்பினை சார்ந்தவராக இருந்தால் ரூ.12,500 செலுத்துவதோடு, அதற்கான ஜாதிச் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்).
வேட்பாளர் ஏதேனும் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளராக இருக்க வேண்டும், வாக்காளராக இல்லாத தொகுதியில் போட்டியிடும் போது சம்பந்தப்பட்ட வாக்காளரின் பெயர்  இடம் பெற்றுள்ள தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரிடமிருந்து சான்று பெற்று வேட்புமனுவுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் வேட்பாளர்கள் படிவம் ஏ மற்றும் படிவம் பி தொடர்புடைய அரசியல் கட்சியிடம் பெற்று வேட்பு மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டும். 
வேட்புமனு மார்ச் 27-ஆம் தேதி காலை 11 மணிக்கு பரிசீலனை செய்யப்படும். இதற்கு பின்னர் வேட்பாளர்கள் எவரேனும் போட்டியில் இருந்து விலக விரும்பினால், மார்ச் 29 பிற்பகல் 3 மணிக்குள் படிவம் 5-இன்படி விலகல் அறிவிப்பு கொடுத்திடலாம். வரும் மார்ச் 29-இல் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பின்னர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
இதனிடையே, வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறை பாதுகாப்புடன், துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் பிஸ்மில்லா கட்சி வேட்பாளராக சேலம் வித்யா நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் எம்.அகமது ஷாஜகான், ஆட்சியர் ரோகிணி ராம்தாஸிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக எம்.அகமது ஷாஜகான் கூறுகையில், இதுவரை 9 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். 
தற்போது 10-ஆவது முறையாக போட்டியிடுகிறேன் என்றார்.
 

More from the section

சேலம் மாவட்டத்தில்89 மி.மீ. மழை பதிவு
பெரியேரி எஸ்.ஆர்.எம். முத்தமிழ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
மணிவிழுந்தான் பாவேந்தர் மெட்ரிக். பள்ளி சாதனை
ரயில் மோதியதில் கட்டடத் தொழிலாளி பலி
சேலம் மாவட்டத்தில் 89 மி.மீ. மழை பதிவு