வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

தோட்டங்களிலிருந்து காட்டு யானைகளை விரட்டக் கோரி ஆட்சியரிடம் மனு

DIN | Published: 12th September 2018 05:25 AM

கொடைக்கானல் கீழ்மலை பகுதியிலுள்ள தோட்டங்களிலிருந்து காட்டு யானைகளை விரட்டக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் சார்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
    திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அடுத்துள்ள சங்காரெட்டிகோட்டை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் உள்ள தோட்டங்களில் முகாமிட்டிருக்கும் காட்டு யானைகளை விரட்டக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். 
    இது தொடர்பாக கிராமத்தினர் கூறியது: சங்காரெட்டி கோட்டைப் பகுதியில் வறட்சியின் காரணமாக விவசாயம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியிலுள்ள தோட்டங்களில் கூலி வேலை செய்து வருகிறோம். இந்நிலையில், தடியன்குடிசை பகுதியில் தனியார் தோட்டங்களுக்கு அவ்வப்போது காட்டு யானைகள் வந்து செல்கின்றன.
     சில நாள்களுக்கு முன், 60 பேர் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது யானைகள் துரத்தின. இதனால், சில நாள்களாக வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வனத் துறையினர் மூலம் யானைகளை காட்டுக்குள் விரட்டுவதற்கு, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். 
வண்டிப் பாதை ஆக்கிரமிப்பு
     இதேபோல், பழனி அடுத்துள்ள பெரிய அம்மாபட்டி பொருந்தலாறு அணை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பொது வண்டிப் பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக மனு அளிக்க வந்தனர்.
    இது தொடர்பாக அப்பகுதியினர் கூறியது: எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்தவர்களும் பயன்படுத்தி வந்த வண்டிப் பாதையை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதோடு, அந்த வழியாகச் செல்வோரை ஆக்கிரமிப்பாளர்கள் மிரட்டி வருகின்றனர். 
    இது தொடர்பாக பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் வண்டிப் பாதையை மீட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
 

More from the section


நத்தத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் வீட்டில் நகை, பணம் திருட்டு

மன்னவனூரில் மஞ்சுவிரட்டு: 3 பேர் காயம்
பழனியில் பாதயாத்திரை பக்தர் மாரடைப்பால் சாவு
முகநூலில் விமர்சனம்: ரஜினி மன்ற நிர்வாகி உறவினர்கள் மீது தாக்குதல்


ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற  சிறுவன் உள்பட 2 பேர் கைது