புதன்கிழமை 16 ஜனவரி 2019

மின் இணைப்புக்காக 3 மாதங்களாக "காத்திருக்கும்' எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம்!

DIN | Published: 12th September 2018 05:25 AM

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்டு 3 மாதங்களாகியும், மின் இணைப்பு வழங்கப்படாமல் பயன்பாடின்றி உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நாளொன்றுக்கு சுமார் 4 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த  மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள 200 படுக்கை வசதி கொண்ட சிகிச்சைப் பிரிவு வளாகத்தில் ரூ.6 கோடி செலவில் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பே, எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் பொருத்தப்பட்டிருந்தாலும், அதற்கு தேவையான மின்சார வசதி ஏற்படுத்தப்படாததால், பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாமல் உள்ளது. 
திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு தற்போதைய நிலையில், தனி மின்மாற்றி மூலம் நாள்தோறும் 280 கிலோ வாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதில், 210 கே.வி. மின்சாரம் மருத்துவமனையின் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு மட்டுமே 100 முதல் 110 கே.வி. மின்சாரம் தேவைப்படும் என கூறப்படுகிறது. அதற்காக, 500 கே.வி. திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மின்மாற்றியை இயக்குவதற்கு, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் ஆய்வு செய்து சான்றளித்து, மின் விநியோகம் தொடங்க வேண்டும். 
 கடந்த 3 மாதங்களாக மின்சாரம் பெறுவது தொடர்பாக, மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டபோதிலும், தற்போது வரை மின்வாரிய அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளவில்லை. இதனிடையே எம்ஆர்ஐ ஸ்கேன் மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கதிரியலர் (ரேடியாலஜிஸ்ட்) பணியிடம் உருவாக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
அனைத்துப் பணிகளையும் துரிதமாக முடித்து, எம்ஆர்ஐ ஸ்கேன் மையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. 
இதுதொடர்பாக திண்டுக்கல் அரசு மருத்துவமனை அலுவலர் ஒருவர் கூறியதாவது: எம்ஆர்ஐ ஸ்கேன் மையத்தில் சில கட்டுமானப் பணிகள் முடிவடையாமல் உள்ளன. அதேபோல் கூடுதல் மின் வசதி பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கதிரியலர் பணியிடம் மாவட்ட மருத்துவமனைகளில் தற்போது உருவாக்கப்படுவதில்லை. திண்டுக்கல்லில் பொருத்தப்பட்டுள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் இணையதள வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.  அதன் மூலம், டெலி ரேடியோகிராபர் மூலமாக உடனுக்குடன் பரிசோதனை அறிக்கை பெறப்பட்டு, நோயாளிகளுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் மின் விநியோகம் கிடைத்தவுடன், எம்ஆர்ஐ ஸ்கேன் மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.

More from the section

பொங்கல் பண்டிகை, தைப்பூசம் கொடியேற்றம்: பழனி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம்
பழனி தைப்பூசத் திருவிழா: இன்று கொடியேற்றம்; ஜன. 21 இல் தேரோட்டம்
வீட்டின் முன் விளையாடிய குழந்தைகள் மீது கிராம நிர்வாக அலுவலர் அமிலம் வீச்சு
தைப் பூசத் திருவிழாவுக்கு 350 சிறப்பு பேருந்துகள்
திண்டுக்கல் பகுதியில் சமத்துவப் பொங்கல் விழா