24 மார்ச் 2019

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் விவகாரம்: நகராட்சி அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

DIN | Published: 19th February 2019 06:44 AM

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து நகராட்சி நிர்வாகம்  எடுத்து வரும் நடவடிக்கைகளால் கட்டட உரிமையாளர்கள்அதிருப்தி அடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 43-கட்டடங்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பேரில் ஜனவரி 29-ஆம் தேதி பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள 1,415 கட்டடங்களை ஆய்வு செய்து மார்ச் 11-ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கொடைக்கானல் பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர். இதனிடையே கொடைக்கானல் பொது மக்கள் சார்பில் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நகராட்சி நடவடிக்கையை நிறுத்தக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். தொடர்ந்து கொடைக்கானல் பொதுநலச் சங்கம் சார்பில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை வரைமுறைப்படுத்தி  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்கோரி கடந்த 11-ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்து மாஸ்டர்பிளான் மார்ச் முதல் வாரத்திற்குள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
 இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (19-ஆம் தேதி) கொடைக்கானல் பகுதிகளில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்து ஆய்வு நடத்துவதற்கு வீட்டு வசதித்துறை செயலர் ராஜேஸ் லக்கானி மற்றும் நகரமைப்பு தலைமைச் செயலர் கிருஷ்ணன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் கொண்ட குழுவினர் வருகை தந்து பார்வையிட்டு ஆய்வு நடத்துவதாக நகராட்சி பொறியாளர் சாகுல் ஹமீது திங்கள்கிழமை தெரிவித்தார்.

More from the section

பழனி அருகே கார் கவிழ்ந்து விபத்து: மலேசியாவைச் சேர்ந்த தாய், மகன் உள்பட 3  பேர் சாவு
திண்டுக்கல் மாவட்டத்தில்  39 இடங்களில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி
கொடைக்கானலில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்
பகத்சிங் நினைவு தினம்
திண்டுக்கல் அருகே சாலை வசதி கோரி கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்