சனிக்கிழமை 23 மார்ச் 2019

பழனி பேருந்து நிலையம் அருகே பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து நெரிசல்

DIN | Published: 19th February 2019 06:48 AM

பழனி பேருந்து நிலையம் அருகே பாலம்கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தற்போது திருவிழாக் காலமாக இருப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
   பழனியில் மழைக் காலங்களில் பேருந்து நிலையத்தை அடுத்த திண்டுக்கல் சாலையிலும், பேருந்து நுழையும் பகுதியிலும் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கும். இதைத் தவிர்க்க இரு சாலைகளிலும் குறுக்காக பெரிய அளவில் சாக்கடை அமைக்க வேண்டும் என தெரிவித்த நகராட்சி நிர்வாகம், இந்த சாலை நெடுஞ்சாலைத்துறையிடம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
  இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் திடீரென திண்டுக்கல் சாலையில் பிரமாண்ட பள்ளம் தோண்டப்பட்டு பாலம் கட்டும்பணி தொடங்கியது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பாலம் கட்டுவது அவசியமே என்றாலும் தற்போது மாசித் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி, பால்குடங்கள் எடுத்து இந்த சாலை வழியாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. வரும் நாள்களில் இதே வழியில் பூச்சொறிதல் ரத ஊர்வலம், அலங்கார ரதங்கள் ஊர்வலம் ஆகியன நடைபெறவுள்ளது. இவை அனைத்துக்கும் பாலம் கட்டும் பணி பெரும் இடையூறாக இருக்கும். 
  இன்னும் 3 நாள்கள் கழித்து தொடங்கியிருந்தால் இந்த இடையூறுக்கு வாய்ப்பு இருந்திருக்காது. ஆகவே, திருவிழா முடியும் வரை அப்பகுதியில் பாதுகாப்பாக தடுப்புக்கள் அமைத்து பணிகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டு திருவிழா முடிந்த பின் துவங்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More from the section


அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் ஆட்டோ ஓட்டுநர் காரில் கடத்திக் கொலை: 
வாடிப்பட்டி அருகே சடலம் மீட்பு

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் சுயவிவரம்
நிலக்கோட்டை சட்டப் பேரவை இடைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர் உள்பட 2 பேர் மனுத் தாக்கல்
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக, பாமக வேட்பாளர்கள் மனு தாக்கல்