புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

மதுரை புத்தகத் திருவிழா நிறைவு: ரூ.3 கோடிக்கு விற்பனை

DIN | Published: 11th September 2018 07:57 AM

மதுரையில் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் நடைபெற்ற 13 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதில், மொத்தம் ரூ.3 கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.
 மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆண்டுதோறும் பபாசி சார்பில் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான புத்தகத் திருவிழா கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கியது. 
  250 அரங்குகளில் பல லட்சம் தலைப்பிலான புத்தகங்கள் இடம்பெற்றன. இதில், மதுரை சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
 புத்தகத் திருவிழாவில் தினமும் மாலையில் புத்தக வெளியீடு, சிறப்பு சொற்பொழிவு, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு புத்தக விற்பனை அதிகமாக இருந்ததாக அரங்கு அமைத்தவர்கள் தெரிவித்தனர்.
 வாசகர்களில் 40 வயதுக்கு உள்பட்டோர் நிகழ்கால வரலாறு மற்றும் அவை சார்ந்த புத்தகங்களை அதிகம் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. 
 காந்தியடிகளின் சத்தியசோதனை, அப்துல்கலாமின் அக்னிச்சிறகுகள் புத்தகம் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. இதேபோல், பெரியார், அண்ணா மற்றும் புரட்சியாளர்கள் சேகுவேரா உள்ளிட்டோரின் நூல்களும், தென் மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் குறித்த புத்தகங்களும் அதிகம் விற்பனையாகியுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவியர் மற்றும் பெண்கள் அதிகமாக நாவல்களை வாங்கியுள்ளனர்.
 கல்லூரி மாணவியர் ஆங்கில நாவல்களையும், பெண்கள் பொன்னியின் செல்வன் மற்றும் குடும்ப நாவல்களையும் அதிகம் வாங்கியுள்ளனர். நாற்பத்தைந்து வயதுக்கு அதிகமான பெண்கள் கல்கி, லட்சுமி, பாலகுமாரன், சாண்டில்யன் உள்ளிட்டோரின் நாவல்களை வாங்கிச் சென்றுள்ளனர். 
  குறுந்தகடு, குழந்தைகளுக்கான பாடல் பதிவான ஒலிநாடா போன்றவற்றின் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. அதே நேரத்தில் கணினி, அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன.
 புத்தகங்கள் விற்பனை குறித்து பபாசி தலைவர் எஸ்.வயிரவன் கூறியது:  கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கூடுதலாகவே புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. மொத்தத்தில் ரூ. 3 கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள் விற்கப்பட்டுள்ளன. மதுரையைத் தொடர்ந்து, தேவகோட்டையில் புத்தகத் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார். 
 பபாசி செயலர் ஏ.ஆர்.வெங்கடாசலம் கூறியது: புத்தகத் திருவிழாவுக்கு கடந்த 10 நாள்களில் சுமார் 3 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். அவர்களில் 15 ஆயிரம் பேர் மாணவ, மாணவியர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை கூடுதலாக இருந்தது என்றார்.

More from the section

ஆரப்பாளையத்தில் பிப்ரவரி 20 மின்தடை


கல்லூரியில் கணிதவியல் திறன் போட்டி

டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர் தேர்வுப் பணியில் இறுதி முடிவெடுக்கக் கூடாது: உயர்நீதிமன்றம்
மாணவிகளிடம் பாலியல் பேர வழக்கு: விடுவிக்கக் கோரி முருகன் தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடி எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு


கள்ளழகர் கோயிலில் தெப்பத் திருவிழா: மண்டூக தீர்த்தத்தில் பெருமாள் எழுந்தருளல்