திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

எய்ம்ஸ் மருத்துவமனைக்காக திருப்பரங்குன்றம்  ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படும்: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் உறுதி

DIN | Published: 12th September 2018 09:47 AM

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதையடுத்து திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்ஷேத்ரா உறுதியளித்தார்.
 மதுரை, திருச்சி ரயில்வே கோட்டங்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ஷேத்ரா தலைமையில் மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோட்ட மேலாளர் நீனு இட்டியரா முன்னிலை வகித்தார். இதில் மதுரை, திருச்சி கோட்டங்களுக்கு உட்பட்ட மக்களவை,  மாநிலங்களவை உறுப்பினர்களோடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
 இதில் மதுரை மக்களவை உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன் பேசுகையில், கூடல்நகரில் இரண்டாவது ரயில் முனையம் ஏற்படுத்துவது, பாண்டியன் விரைவு ரயிலுக்கு கூடல்நகரில் நிறுத்தம் ஏற்படுத்துவது, பயணிகளின் கோரிக்கைகள், புகார்களைப் பெறுவதற்கு வசதியாக மதுரை ரயில் நிலையத்துக்கென சிறப்பு செல்லிடப்பேசி செயலி அறிமுகப்படுத்துவது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதால் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தின் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
 விருதுநகர் மக்களவை உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் பேசும்போது, விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் பத்து ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், வாரம் இரு முறை இயக்கப்படும் சிலம்பு விரைவு ரயிலை வாரத்துக்கு மூன்று நாள்கள் இயக்க வேண்டும் என்றார்.
   ராமமூர்த்தி சாலை ரயில்வே மேம்பாலப் பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும். சிலம்பு விரைவு ரயில் பயணத்தை அதிகரிப்பது குறித்து ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் உறுதி அளித்தார். 
 சிவகங்கை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் பேசுகையில்,  திருப்பத்தூர், சிங்கம்புணரி வழியாக காரைக்குடி-திண்டுக்கல், திருப்பத்தூர், மேலூர் வழியாக காரைக்குடி-மதுரை, ஆலங்குடி, அறங்தாங்கி வழியாக புதுக்கோட்டை-ராமநாதபுரம் புதிய ரயில் பாதை பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். மேலும் காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை, கல்லல் ரயில்வே கடவுப்பாதை,  புதுவயல், கல்லூர் உள்ளிட்ட இடங்களில் ரயில்வே  மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்றார்.  இவற்றை பரிசீலிப்பதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் உறுதியளித்தார்.
 முன்னதாக மதுரை ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலய பங்குத்தந்தை செபாஸ்டின் , எம்பி ஆர்.கோபாலகிருஷ்ணனிடம் மனு அளித்தார். அதில், வேளாங்கண்ணிக்கு, போதிய ரயில் வசதி இல்லை. எனவே தென் மாவட்டங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்க வேண்டும். ஏற்கெனவே இயக்கப்பட்ட கொல்லம்-நாகூர் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 
இவற்றை ரயில்வே நிர்வாகத்துக்குப் பரிந்துரை செய்வதாக  கோபாலகிருஷ்ணன் உறுதியளித்தார்.
 கூட்டத்தில் மக்களவை உறுப்பினர்கள் ஆர்.பார்த்திபன்(தேனி), ஏ.அன்வர் ராஜா(ராமநாதபுரம் ), எம்.உதயகுமார்(திண்டுக்கல்), சி.மகேந்திரன்( பொள்ளாச்சி),  விஜிலா சத்யானந்த்(திருநெல்வேலி ),  ஆர்.கே.பாரதி மோகன்(மயிலாடுதுறை ),  கே.பரசுராமன்(தஞ்சாவூர்), கூடுதல் கோட்ட மேலாளர் லலித் குமார் மன்ஷுக்கானி, மதுரைக் கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More from the section

இணையவழி வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: சுதேசி விழிப்புணர்வு இயக்கம் வலியுறுத்தல்
சோலைமலையில் இன்று தங்கத் தேரோட்டம்
பைக் மோதியதில் தேநீர் கடை ஊழியர் சாவு
ஆடையில் தீப்பற்றி பெண் சாவு
கொட்டாம்பட்டியில் நாளை மின்தடை