வியாழக்கிழமை 21 மார்ச் 2019

திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது

DIN | Published: 12th September 2018 09:50 AM

மதுரையில் திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வாழைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த செந்தில் (29) தனிப்படை போலீஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நண்பரும், திமுக செயற்குழு உறுப்பினருமான பொட்டு சுரேஷ் கடந்த 2013-இல் மதுரை டிவிஎஸ் நகரில்  வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதில் பொட்டு சுரேஷ் கொலையில் தொடர்புடையதாக வேளாண் விற்பனைக் குழு முன்னாள் தலைவர் அட்டாக் பாண்டி உள்ளிட்டோர் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். 
 இந்நிலையில் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய மதுரை வாழைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் செந்தில் தலைமறைவாக  இருந்தார்.  அவருக்கு மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றம் (எண்  4) கைது வாரண்ட்டும் பிறப்பித்திருந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்து வந்த செந்திலை பிடிப்பதற்காக, சிபிசிஐடி ஆய்வாளர் சேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் செந்திலை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் வெளியூரில் தலைமறைவாக இருந்து வந்த செந்தில் மதுரை விளாங்குடி அருகே உள்ள கரிசல்குளத்துக்கு வந்திருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கரிசல் குளம் சென்ற போலீஸார் அங்கு உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த செந்திலை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 

More from the section

மதுரை அருகே 80 கிலோ தங்கம் பறிமுதல்: அரசு கருவூலத்தில் ஒப்படைப்பு
பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீனில் விடுதலை
தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அலங்காநல்லூரில் வாக்குகள் சேகரிப்பு


அதிமுக வேட்பாளர் நிகழ்ச்சியை  புறக்கணித்த அமைச்சர்கள்: கட்சி வட்டாரத்தில் பரபரப்பு

"வாரிசுகள் அரசியலுக்கு வரக் கூடாது என்று சட்டம் இல்லை'