வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

மதுரை மாநகராட்சி நகரப் பொறியாளர் பணியிடை நீக்கத்தை எதிர்த்து வழக்கு: நகராட்சி நிர்வாகத்துறை  முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

DIN | Published: 12th September 2018 09:47 AM

மதுரை மாநகராட்சி நகர் பொறியாளர் பணியிடை நீக்கத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
 மதுரை மாநகராட்சி நகரப் பொறியாளராக பணியாற்றி வந்தவர் மதுரம். கடந்த 20 ஆண்டுகளுக்கும்  மேலாக மதுரை மாநகராட்சியிலேயே  பணியாற்றி வந்தார். இந்நிலையில் நகரப் பொறியாளர் மதுரத்தை தூத்துக்குடி மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்து, சென்னை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர்சிங் உத்தரவிட்டிருந்தார். இந்த மாறுதல் உத்தரவை எதிர்த்து மதுரம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல்  செய்தார்.
 இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரார் மதுரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அரசுத்தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார். மேலும் பணியிடை நீக்கத்துக்கான அரசாணையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதையடுத்து பணிமாறுதலுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
 இந்நிலையில் தன்னை பணியிடை நீக்கம் செய்ததற்கான அரசாணைக்கு தடை கோரி மதுரம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், என்னை பழிவாங்கும் நோக்கில் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். 14 ஆண்டுகளுக்கு முன்னர் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்காக தற்போது என்னை பணியிடை நீக்கம் செய்துள்ளது ஏற்புடையதல்ல. மேலும், இதேபோல என் மீதான குற்றச்சாட்டு தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த நீதிமன்றம் என் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. எனவே காரணமின்றி என்னை பணியிடை நீக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

More from the section

மதுரை விமான நிலையம் விரிவாக்கம்: மத்திய அமைச்சர் இன்று தொடக்கி வைக்கிறார்
இன்று "அம்மா' திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள்
பிளஸ் 2 வினாத்தாள் மையங்களில் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு
முதலமைச்சர் கோப்பை  கூடைப்பந்தாட்டம்: காஞ்சிபுரம், சென்னை அணிகள் முதலிடம்
கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை