புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

மதுரை மாவட்டத்தில் 700 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பம்

DIN | Published: 12th September 2018 09:49 AM

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் 700 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கேட்டு காவல்துறையிடம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவில் விநாயகர் சிலை வைக்கப்படும் இடங்களில் மின் விளக்கு வசதிக்காக மின்வாரியத்திடம் தாற்காலிக தனி இணைப்பு பெறவேண்டும். மாநகராட்சியிடம் முறையான அனுமதி, தீயணைப்புத்துறை சான்றிதழ், சிலை வைக்கப்பட உள்ள இடத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகள் வைப்பதற்கான அனுமதி கோரி காவல்துறைக்கு விண்ணப்பங்களை அனுப்பியுள்ளன.
இதில் மதுரை மாநகரில் இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளின் சார்பில் 350 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சிலைகளுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்கள் புதன்கிழமை வழங்கப்பட உள்ளதாக இந்து அமைப்புகள் தெரிவித்தன. 
மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, மேலூர் ,கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, திருமங்கலம், பேரையூர், தே.கல்லுப்பட்டி, ஒத்தக்கடை, சோழவந்தான், சமயநல்லூர், பரவை, அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைப்பதற்காக 387 விண்ணப்பங்கள் ஊரகக்காவல்துறையிடம் கொடுக்கப்பட்டுள்ளன. 
இந்த விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக மாநகர் மற்றும் ஊரகக் காவல்துறை வட்டாரங்கள் கூறும்போது, உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது வரை விண்ணப்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. எனவே புதன்கிழமை இறுதி எண்ணிக்கை அறிவிக்கப்படும் என்றனர்.

More from the section

ஆரப்பாளையத்தில் பிப்ரவரி 20 மின்தடை


கல்லூரியில் கணிதவியல் திறன் போட்டி

டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர் தேர்வுப் பணியில் இறுதி முடிவெடுக்கக் கூடாது: உயர்நீதிமன்றம்
மாணவிகளிடம் பாலியல் பேர வழக்கு: விடுவிக்கக் கோரி முருகன் தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடி எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு


கள்ளழகர் கோயிலில் தெப்பத் திருவிழா: மண்டூக தீர்த்தத்தில் பெருமாள் எழுந்தருளல்