24 மார்ச் 2019

கடைகளில் பெயரளவில் கண்காணிப்பு கேமராக்கள்: ஆய்வு செய்ய காவல்துறை குழு அமைக்க முடிவு

DIN | Published: 19th February 2019 08:12 AM

மதுரையில் வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள  கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும் என மாநகர் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதன் அவசியம்  குறித்த விழிப்புணர்வு  கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மதுரை எம்.ஜி.ஆர். பேருந்து நிலைய வளாகத்தில்  நடைபெற்றது. இதில் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள கடை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். 
அவர்களிடம் வணிக வளாகங்கள், பெட்ரோல் பங்க், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்துக் கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.வி.) பொருத்துவதன் அவசியம் குறித்து, மதுரை மாநகரக் காவல் குற்றப்பிரிவு துணை ஆணையர் த.செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் அறிவுறுத்தினர்.  
மேலும் முதியவர்களுக்கு உதவி செய்வது போல நடித்து, அவர்களிடம் இருந்து நகை, பணத்தை திருடிச்செல்லும் சம்பவங்களை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்தும், காவலன் செயலியின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது.  
இதுகுறித்து மாநகரக் காவல் குற்றப்பிரிவு துணை ஆணையர் த.செந்தில்குமார் கூறியது: பெரும்பாலான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பெயரளவிற்கு மட்டுமே வைக்கப்படுகின்றன. தரமான கேமராக்கள் பொருத்தப்படுவது இல்லை. 
கேமராக்கள் கடையை மட்டுமே படம்பிடிக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன. கடையின் வெளிப்புறம் மற்றும் சாலை தெரியும்படியாக கேமராக்களை அமைக்கவேண்டும். 4 ஜி.பி. அளவுக்கு பதிவுகளை சேமிக்கும் கருவியை அமைக்க வேண்டும். முறையாக, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டால், குற்றச்சம்பங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க முடியும். குற்றச்சம்பவங்கள் நடப்பதும் அறவே குறைந்துவிடும். 
போலீஸ் குழுக்கள் அமைத்து மாநகர் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் நன்றாக செயல்படுகிறதா என ஆய்வு செய்யப்படும் என்றார்.

More from the section

மதுரையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
வல்லடிகாரர் சுவாமி கோயில் தேரோட்டம்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி: மதுரை வீரர்கள் சாதனை
படிப்பை முடிக்கும் பெண்கள் வீட்டில் முடங்கி விடக்கூடாது
சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு: போஸ்கோ சட்டத்தில் இளைஞர் கைது