24 மார்ச் 2019

போலியோ சொட்டு மருந்து முகாம்களை முறையாக நடத்தக்கோரி வழக்கு

DIN | Published: 19th February 2019 08:13 AM

நாடு முழுவதும் முறையாக மற்றும் தொடர்ச்சியாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களை நடத்தக் கோரும் வழக்கில் மத்திய சுகாதாரத் துறைச் செயலர், தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த ஜானசிராணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், இந்தியாவில் 2009ஆம் ஆண்டு 100 கோடியாக இருந்த மக்கள்தொகை,  தற்போது 130 கோடியாக அதிகரித்துள்ளது. இதில்,  18 வயதுக்குகீழ் 32 கோடி இளைஞர்கள் உள்ளனர்.
இந்தியாவில் போலியோவால் குழந்தைகள், சிறுவர்கள் பாதிப்படைந்து வந்தனர். ஒருமுறை இந்நோயால் பாதிக்கப்பட்டால் ஆயுள் முழுமைக்கும் மாற்றுத்திறனாளியாக வாழும் கொடும் பாதிப்பை ஏற்படுத்தும் நோய் இது.  அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் போலியோ இல்லாத நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 
இந்தியாவில் 1995ஆம் ஆண்டில் இருந்து போலியோ சொட்டு மருந்து வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்டுக்கு குறைந்தது 3 முறை போலியோ சொட்டு மருந்து, 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இன்னும் போலியோ பாதிப்பு இல்லாத நாடாக  இந்தியா அறிவிக்கப்படவில்லை. எனவே, நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களை முறையாக நடத்த வேண்டும். மேலும் வருங்காலங்களில் நாடு முழுவதும் முறையாக மற்றும் தொடர்ச்சியாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை நடத்த உத்தவிடவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து மத்திய சுகாதாரத் துறைச் செயலர், தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப். 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

More from the section

மதுரையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
வல்லடிகாரர் சுவாமி கோயில் தேரோட்டம்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி: மதுரை வீரர்கள் சாதனை
படிப்பை முடிக்கும் பெண்கள் வீட்டில் முடங்கி விடக்கூடாது
சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு: போஸ்கோ சட்டத்தில் இளைஞர் கைது