வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

"இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்'

DIN | Published: 12th September 2018 09:52 AM

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை உடனடியாக அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
 பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
  இமானுவேல் சேகரனின் நினைவுதினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, உடனடியாக அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். தேவேந்திரகுல வேளாளர் மக்களை தனித்தனியாக பெயர் பட்டியல் வைத்து அழைக்கின்றனர். அவர்களை ஒரே இனமாக தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும். எஸ்.சி., பிரிவிலிருந்து ஓ.பி.சி. பிரிவில் சேர்க்க வேண்டும். இந்த மக்களை எஸ்.சி. பிரிவில் ஆங்கில அரசு சேர்த்தது மிகப்பெரிய வரலாற்றுப்பிழை. எஸ்.சி., என அறிவித்ததால் 98 சதவீதம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் அக்டோபர் 6ஆம் தேதி லட்சக்கணக்கான மக்கள் கூடும் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டுக்கு முன்னதாகவே எங்களது கோரிக்கைக்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்றார்.
ஜான்பாண்டியன் அஞ்சலி: தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் ஜான்பாண்டியன், இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "எங்களது நீண்ட நாள் கோரிக்கையான இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவித்து, உடனே அரசாணையில் வெளியிட வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களை பட்டியல் இனத்திலிருந்து நீக்கி வேளாண் மரபினராக அறிவிக்க வேண்டும்' என்றார். 
      ராமநாதபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த இளைஞர் பிரவீன், தனது கன்னத்தில் 8 அடி நீளம் உள்ள வேலினை அலகு குத்தி நினைவிடத்துக்கு வந்து இமானுவேல் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். மேலும், ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அஞ்சலி செலுத்தினர். 
சிலர் நினைவிடத்தில் முடிக்காணிக்கை செலுத்தினர். ஓட்டப்பாலம் பகுதியிலிருந்து நினைவிடம் வரை அஞ்சலி செலுத்த வந்தவர்களில் சிலர், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் ஆடியும், மேளதாளங்கள் முழங்கவும் ஊர்வலமாகவும் சென்றனர். அரசுப் பணியாளர்களும் பலர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

More from the section

ராமேசுவரம் மீனவர்கள் 8 பேருக்கு மார்ச் 6 வரை காவல் நீட்டிப்பு
"காங்கிரஸ்-திமுக கூட்டணியால் யாருக்கும் நன்மை இல்லை'
பரமக்குடி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 3 ஆவது நாளாக வேலைநிறுத்தம்
ராமநாதபுரத்தில் சட்ட உதவி மையம் தொடக்கம்


"நாட்டுப்புறக் கலைஞர்கள் இலவச  இசைக்கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம்'