புதன்கிழமை 20 மார்ச் 2019

எஸ்.பி.பட்டினத்தில் 11 ஆம் நூற்றாண்டு சோழர் கால உறைகிணறு கண்டெடுப்பு

DIN | Published: 22nd February 2019 07:05 AM

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினத்தில்  11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சுடுமண் உறை கிணறு, சீன நாட்டுப் பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி. பட்டினத்தில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு,  ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ்த்துறை மாணவி வே.சிவரஞ்சனி, திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் மு.விசாலி, மு.சுதர்ஸன், து.மனோஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 
இங்குள்ள ஐயாகுளத்தின் கரையில் சோழர் கால சுடுமண் உறைகிணறு, சீனநாட்டுப் பானை ஓடுகள் ஆகியவற்றைக் கண்டெடுத்துள்ளனர். 
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு  வியாழக்கிழமை கூறியது:  இங்குள்ள சிவன் கோயிலின் எதிரில் உள்ள ஐயா குளத்தின் கிழக்குக் கரையில் மண்ணில் புதைந்த நிலையில் சுடுமண் உறைகிணறு உள்ளது.  7 அடி சுற்றளவில் இக்கிணறு உள்ளது. இதன் உறைகள் ஒவ்வொன்றும் 15 செ.மீ. உயரம் உள்ளன. இக்குளத்தின் வடக்கில்  மரைக்காயர் குளம் உள்ளது.
 இக்குளம் நிரம்பிய பின், அதன் உபரி நீர் ஐயாகுளத்துக்கு வருவதற்வாக நான்கு சுடுமண் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சுற்றிலும் செங்கல் கட்டுமானம் உள்ளது. இந்த இரு குளங்களும் ஒரே காலகட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம். குளத்தில் தண்ணீர் வற்றிய காலங்களில் பயன்படுத்துவதற்காக உறை கிணறு தோண்டப்பட்டிருக்கலாம். 
இங்கு காணப்படும் சோழர் காலத் தடயங்கள் மூலம் இந்த உறைகிணறு கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம். ஐயா குளத்தின் கரையில் சீனநாட்டுப் பானை ஓடுகள், கெண்டியின் நீர் ஊற்றும் பகுதி, இரும்புத்தாதுக்கள், சுடுமண் கூரை ஓடுகள், வட்டச் சில்லுகள், அறுத்த சங்கு  ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.  சீனநாட்டுப் பானை ஓடுகளில் போர்சலைன், செலடன் என இருவகைகள் உள்ளன. இந்த இருவகை ஓடுகளும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. கிண்ணம், குடுவை போன்றவற்றின் அடிப்பகுதிகளும் கிடைத்துள்ளன. 
பெளத்தமத தடயங்கள் இப்பகுதியில் காணப்படுவதால் இவ்வூரில் சீனர்களின் குடியிருப்பு இருந்திருக்க வாய்ப்புள்ளது. சீனர்கள் பெளத்தமதம் மற்றும் வணிகம் சார்பாக இப்பகுதிக்கு வந்திருக்கலாம். சோழர்களுடன் கி.பி.10 ஆம் நூற்றாண்டு முதல் சீனர்கள் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள சிவன்கோயில் கல்வெட்டுகளில் கிடைத்த தகவலின்படி, சங்கு அறுத்து வளையல் செய்யும் தொழில் இங்கு நடைபெற்றிருக்கலாம். இவ்வூரின் பழைய பெயர் சுத்தவல்லி. இது முதலாம் குலோத்துங்கசோழனின் மகள் சுத்தமல்லியாழ்வார் பெயரால் உருவாக்கப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டின் எல்லையான இப்பகுதி சோழர்களிடமே பெரும்பாலும் இருந்துள்ளது. இதைக் கைப்பற்றிய பின் முதலாம் சுந்தரபாண்டியன் தனது பெயரை இவ்வூருக்குச் சூட்டியுள்ளார். இவ்வூருக்கு மிக அருகில் உள்ள தீர்த்தாண்டதானமும் ஒரு வணிக நகரம் தான்.  இப்பகுதியில் உள்ள இயற்கையான உப்பங்கழிகளால் இவை  துறைமுகங்களாக விளங்கியுள்ளன. கி.பி. 11ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை இவ்வூர் வணிகத்தில் சிறந்து விளங்கியுள்ளது என்றார்.
 

More from the section

சாயல்குடியில் கட்டட  ஒப்பந்ததாரரிடமிருந்து ரூ.56 ஆயிரம் பறிமுதல்
ராமேசுவரம் மீனவர்களுக்கு 7 ஆவது முறையாக இலங்கை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு
தொண்டி அருகே தீ விபத்தில் காயமடைந்தவர் சாவு
குடிநீரின்றி 10 ஆண்டுகளாக அவதி: ராமநாதபுரம் ஆட்சியரிடம் 4 கிராம மக்கள் மனு
மண்டபம் அருகே செங்கல் லாரி-வேன் மோதல்: அண்ணன், தம்பி சாவு