புதன்கிழமை 20 மார்ச் 2019

பரமக்குடி அருகே சாயிபாபா கோயிலில் அன்னதானம் சாப்பிட்ட பக்தர்களுக்கு வாந்தி, மயக்கம்: 60 பேர் மருத்துவமனையில் அனுமதி

DIN | Published: 22nd February 2019 08:06 AM

பரமக்குடி அருகே உள்ள தெளிச்சாத்தநல்லூர் பகுதியில் அமைந்துள்ள சாயிபாபா கோயிலில் வியாழக்கிழமை அன்னதானம் சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் மயங்கியதை தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெளிச்சாத்தநல்லூர் சாயிபாபா கோயிலில் வாரந்தோறும் வியாழக்கிழமை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இங்கு, வழக்கமாக ஏராளமான பக்தர்கள் அன்னதானம் சாப்பிடுவது வழக்கம்.இந்த வாரமும் மாலை 7 மணியளவில் நடைபெற்ற அன்னதானத்தில், வைகை நகர், காட்டுப் பரமக்குடி, ஓட்டப்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு,  அங்கு வழங்கப்பட்ட எலுமிச்சை சாதம், புளிசாதம், பிஸ்கட் ஆகியவற்றை சாப்பிட்டு விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளனர். பின்னர், அன்னதானம் சாப்பிட்ட பக்தர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். இதைக் கண்ட உறவினர்கள், மயங்கிய குழந்தைகள், பெரியவர்களை உடனடியாக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், பரமக்குடி வைகை நகரைச் சேர்ந்த மேனகா (5), சண்முகராணி (37), அன்பரசி (57), லாவன்யா (22), சன்விகா (8), நிலவிகா (6), காரக்காள் (35),  ஓட்டப்பாலம் பகுதியைச் சேர்ந்த பானுமதி (32), வசந்தபுரம் கயல்விழி (50), ராமகிருஷ்ணன் (38), பாதம்பிரியா, மணிகண்டன், சந்தியா, கலா (40), நாசர் (17), ரேகா (15), கணபதி (50) உள்பட 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அன்னதானம் சாப்பிட்ட பக்தர்களை பரிசோதித்த மருத்துவர்கள், உணவு விஷத்தன்மையால் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது என்றும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். 
தகவலறிந்த சார்-ஆட்சியர் பி. விஷ்ணுசந்திரன், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து விசாரணை நடத்தினார்.

More from the section

சாயல்குடியில் கட்டட  ஒப்பந்ததாரரிடமிருந்து ரூ.56 ஆயிரம் பறிமுதல்
ராமேசுவரம் மீனவர்களுக்கு 7 ஆவது முறையாக இலங்கை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு
தொண்டி அருகே தீ விபத்தில் காயமடைந்தவர் சாவு
குடிநீரின்றி 10 ஆண்டுகளாக அவதி: ராமநாதபுரம் ஆட்சியரிடம் 4 கிராம மக்கள் மனு
மண்டபம் அருகே செங்கல் லாரி-வேன் மோதல்: அண்ணன், தம்பி சாவு