வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

பயிர்க் காப்பீடு நிவாரணத் தொகை வராததால் விவசாயிகள் ஏமாற்றம்

DIN | Published: 19th February 2019 02:40 AM

கடந்த 2017-18 ஆம் ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்குரிய நிவாரணத் தொகை இன்னும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாததால், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால், வேளாண் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், பாரத பிரதமர் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு பாதிப்பின் அடிப்படையில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வந்தது.
அதனடிப்படையில், கடந்த ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். தேவகோட்டை மற்றும் இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என, கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் 
கூட்டத்தில் விவசாயிகள் முறையிட்டனர்.
அதையடுத்து, ஜனவரி 31ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு தலைமை வகித்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன், கடந்த ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்குவதற்காக ரூ.226 கோடி வரப்பெற்றுள்ளது. மேலும் ரூ. 60 கோடி வரை வர வேண்டியிருக்கிறது. எனவே, 177 கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும் என 
அறிவித்தார்.
ஆனால், பிப்ரவரி 18 ஆம் தேதியாகியும் ஆட்சியர் அறிவித்தபடி இன்னும் எந்தவொரு விவசாயிக்கும் பயிர்க் காப்பீடு தொகை  வழங்கப்படவில்லை என்றும், ஏற்கெனவே வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் இதை நம்பி மேலும் ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே, பயிர்க் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More from the section


கால்வாய்க்குள் தவறி விழுந்து பாய் வியாபாரி சாவு

காளையார்கோவில் அருகே பெண் மர்மச் சாவு


"மத்திய, மாநில அரசுகளின் ஊழல்கள் குறித்தே பிரசாரம் செய்வோம்'

சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்
மண்டல அலுவலர்களுக்கானதேர்தல் விதிமுறைகள் குறித்த பயிற்சி