வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

நியாயவிலை கடைகளில் விற்பதற்காக பதுக்கல்: கூடலூரில் சேமியா கிட்டங்கி முற்றுகை

DIN | Published: 12th September 2018 05:31 AM

தேனி மாவட்டம் கூடலூரில்,  நியாய விலைக் கடைகளில்  கட்டாய விற்பனைக்காக சேமியா பண்டல்களை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி, தனியார் கிட்டங்கியை செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
   தேனி மாவட்டம் கூடலூரில் உள்ளது உழவர் பணி கூட்டுறவு கடன் வங்கி சங்கம்.  இதன் நிர்வாகத்தின் கீழ் கூடலூர், லோயர்கேம்ப், கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூர்பாளையம் பகுதியில் நியாய விலை கடைகள் உள்ளன.
 பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, பாமாயில், பருப்பு போன்ற உணவு பொருள்கள் விநியோகம் செய்யும்போது, மேலும் சில பொருள்களை வாங்க ஊழியர்கள் நிர்பந்திக்கின்றனர் என்று பொதுமக்ககள்  பல நாள்களாக புகார் கூறி வந்தனர். 
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை, கூடலூர் 17 ஆவது வார்டு ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டடத்தில், நியாய விலை கடைகளில் விற்பனைக்காக  சேமியா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கூடலூர் முன்னாள் நகர சபை தலைவர் என்.எஸ்.கே.ஆர். அருண்குமாரிடம் தகவல் தெரிவித்தனர். 
இதையடுத்து அங்கு பொதுமக்களுடன் அருண்குமார் சென்று  பார்வையிட்டபோது,  ஐநூறுக்கும் மேற்பட்ட சேமியா பண்டல்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 
 இதுகுறித்து அருண்குமார்,  கூட்டுறவு வங்கி அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தார். இது குறித்து உடனடியாக விசாரணை நடத்துவதாக அலுவலர்கள்  தெரிவித்தனர். 
இது பற்றி உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் மோகன் முனியாண்டி கூறியது:  நியாயவிலை கடைகள் நடத்தும் கூட்டுறவு சங்கங்கள், அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்களை 
விநியோகம் செய்யும்போது, கூட்டுறவு சங்க வளர்ச்சி மற்றும் நிர்வாக செலவுகளுக்காக அத்தியாவசியமற்ற பொருள்களையும் விற்பனை செய்யலாம், ஆனால் கட்டாயப்படுத்தி விற்கக் கூடாது என்றார்.

More from the section

தேவாரத்தில் பிப்ரவரி 22 மின்தடை
363 அங்கன்வாடி பணியிடங்களுக்கு 4,487 பேர் விண்ணப்பம்: இன்று முதல் நேர்காணல்


கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்தி வைப்பு

கல்லூரி வாகனம் மோதி மூதாட்டி சாவு
பெரியகுளம் அருகே பொது விருந்து: ஆட்சியர் பங்கேற்பு