வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

பதினெட்டாம் கால்வாயில் கூடுதல் கதவணைகள் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

DIN | Published: 12th September 2018 05:31 AM

தேவாரம் அருகே 18 ஆம் கால்வாயில் கூடுதல் கதவணைகள் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தேனி மாவட்டம், தேவாரம், உத்தமபாளையம் பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில், 18 ஆம் கால்வாய் அமைக்கப்பட்டது. அதனையடுத்து, போடி பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில் 18 ஆம் கால்வாய் நீட்டிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. 55 கி.மீ. தொலைவு கொண்ட இந்த 2 கால்வாய்கள் மூலம் 25 ஊராட்சிகளைச் சேர்ந்த 51 கண்மாய்கள் பயன்பெற்று வருகின்றன.
இந்நிலையில், அனைத்து கண்மாய்களிலும் தண்ணீர் நிரம்பும் வகையில், இரண்டு இடங்களில் கதவணைகள் அமைக்க வேண்டும் என, 18 ஆம் கால்வாய் விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து இச்சங்கத்தின் செயலர் அ. திருப்பதிவாசகன், தமிழக முதல்வர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு:  
தேனி மாவட்டம், கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி, தேவாரம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது. தே.மீனாட்சிபுரம் ஊரின் அருகே செல்லும் 18 ஆம் கால்வாயில் புதிதாக கதவணை அமைத்து, கால்வாயை ஒட்டியுள்ள செம்புலி ஊருணிக்கு தண்ணீர் திறந்து விடுவதன் மூலம் இப்பகுதி மக்கள், விவசாயிகள் பயனடைவர்.
அதேபோல், 18 ஆம் கால்வாயிலிருந்து கரியணம்பட்டி மற்றும் பண்ணைப்புரம் கதவணையிலிருந்து தொடர் சங்கிலி முறையில் டி.சிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டியைச் சேர்ந்த 9 குளங்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல சிரமம் ஏற்படுகிறது.
எனவே, கோம்பை ஒட்டான்குளம் செல்லும் பாதை அருகே  ஒரு கூடுதல் கதவணை அமைத்து தண்ணீர் திருப்பிவிடும்பட்சத்தில்,  இப்பகுதி குளங்களுக்கு தண்ணீர் எளிதாக வந்து சேருவதற்கு வழிவகை கிடைக்கும்.
இதேபோல், 18 ஆம் கால்வாய் நீட்டிப்பில் 850 ஆவது மீட்டரில் ஒரு கதவணை அமைத்து, அருகிலிருக்கும் பொம்மம்மாள் ஊருணிக்கு தண்ணீர் நிரப்பும்பட்சத்தில், அவ்வழியாக இருக்கும் தடுப்பணைகள் நிரம்பி இப்பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும், குடிநீர் பற்றாக்குறை முற்றிலும் நீங்கவும், தொடர் சங்கிலி அமைப்பில் இருக்கும் கணபதி செட்டி, பேரிநாயக்கன் குளம், எரணங்குளம் போன்ற போடி பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் எளிதாக கொண்டு செல்ல நீர்வழிப் பாதையாகவும் அமையும்.
எனவே, 18 ஆம் கால்வாய் மற்றும் 18 ஆம் கால்வாய் நீட்டிப்பு மூலம் விவசாயிகள் முழுமையாக பயனடையும் வகையில், கூடுதல் கதவணைகளை அமைக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

More from the section

தேவாரத்தில் பிப்ரவரி 22 மின்தடை
363 அங்கன்வாடி பணியிடங்களுக்கு 4,487 பேர் விண்ணப்பம்: இன்று முதல் நேர்காணல்


கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்தி வைப்பு

கல்லூரி வாகனம் மோதி மூதாட்டி சாவு
பெரியகுளம் அருகே பொது விருந்து: ஆட்சியர் பங்கேற்பு