சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

உத்தமபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகளைத் தடுக்கக் கோரிக்கை

DIN | Published: 22nd January 2019 08:12 AM

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வழியாக செல்லும் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதால் இப்பகுதியில் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை (எண்.183) தேனி மாவட்டம் வழியாகச் செல்கிறது. 2011 ஆம் ஆண்டு இச்சாலை இரு வழித்தடமாக மாற்றப்பட்டது. ஆனால் தேனி மாவட்டத்தில் இதற்கான பணிகள் முழுமை பெறவில்லை.
இதன் காரணமாக கோட்டூர், சீலையம்பட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகளில் 300 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
முழுமை பெறாத பணிகள்:தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்ந்த பிறகும் பணிகள் முழுமை பெறவில்லை.
தேவதானப்பட்டி, வீரபாண்டி பகுதிகளை தவிர மாவட்டத்திலுள்ள தேனி, பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கவில்லை. மேலும், இச்சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்காக ஒதுக்கப்பட்ட தடத்தில் புதர் மண்டி கிடக்கிறது. 
தவிர, நெடுஞ்சாலைகளில் அதிகரித்து வரும் உணவகங்கள் உள்ளிட்ட சாலையோர ஆக்கிரமிப்புகள் காரணமாகவும் வாகனங்கள் செல்வதில் இடையூறுகள் உள்ளன. 
இது போன்ற காரணங்களால் இச் சாலையில் தொடரும் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இவற்றைத் தடுக்க காவல் துறையினர் சாலையின் குறுக்கே வேகத் தடுப்புகளை வைத்துள்ளனர். ஆனாலும் விபத்துகள் குறையவில்லை என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.   
விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?: தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்ட நிலையில் நகர் பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். இரு சக்கர வாகனங்கள் செல்லும் வழித்தடங்களிலுள்ள தடைகளை அகற்ற வேண்டும். சாலையின் இரு புறமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும், இச் சாலையில்  பொதுமக்கள்  மற்றும் வேளாண் வாகனங்கள் அதிகம் செல்வதால், இவ்வழியாக செல்லும்  வாகனங்களன் வேகத்தைக் குறைக்க, எச்சரிக்கை பலகை  வைக்க வேண்டும். 
இவ்வாறு பல்வேறு வகைகளில் இச்சாலையில் விபத்தை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More from the section

தேனியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது
தேனி ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை முயற்சி


பெரியகுளம் அருகே வனப்பகுதியில் தீ

கௌரவ ஊக்கத் தொகை பெற பிப். 27-க்குள் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
பல்லவராயன்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு: ஆட்சியர் ஆய்வு