24 பிப்ரவரி 2019

விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் மானியத்தில் மதிப்புக் கூட்டு இயந்திரங்கள்

DIN | Published: 12th September 2018 05:39 AM

விருதுநகர் அருகே மன்னார்நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்ட விவசாய பொருள்களை சுத்திகரிப்பு செய்வதற்கும், மதிப்புக் கூட்டுவதற்குமான இயந்திரங்களை, மாவட்ட  ஆட்சியர் அ. சிவஞானம் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.
      விருதுநகர் மாவட்ட வேளாண்மைத் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறையின் மூலம் மானாவாரி மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ், மருதநத்தம் தொகுப்பு பகுதியில் விவசாயிகள் விளைவித்த பொருள்களை முதல் நிலை சுத்திகரிப்பு மற்றும் மதிப்புக் கூட்டுவதற்குமான இயந்திரங்களை ரூ.10 லட்சம் மானியத்தில், விருதை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. 
    இந்த இயந்திரங்களை, மன்னார்நாயக்கன்பட்டி கிராம விவசாயிகளின் பயன்பாட்டுக்கு, ஆட்சியர் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்துப் பேசியதாவது:
     ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் மதிப்புக் கூட்டு நிலையம் மூலம் சிறுதானியங்களான குதிரைவாலி, திணை, சாமை,  வரகு மற்றும் பனிவரகு போன்றவற்றை அரிசி மற்றும் மாவு ஆக்குவதற்கும் மற்றும் உளுந்து, பாசிப்பயறு மற்றும்  துவரை ஆகிய பயறுகளில் தொலி உரிக்கவும் பயன்படுத்தலாம்.
    மேலும், இயந்திரங்கள் மூலம் இந்த பொருள்களை மதிப்புக் கூட்ட பயன்படுத்தலாம். 
 எண்ணெய் வித்து பயறுகளில் கடலை தொலி உரிக்கும் இயந்திரம் மற்றும் எண்ணெய்  எடுக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. கம்பு, சோளம் மற்றும் கேப்பை ஆகிய தானியங்களை முதல்நிலை சுத்திகரிப்பு செய்து மெருகேற்றுவதற்கும் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
    இதன்மூலம், விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பொருள்களை மதிப்புக் கூட்டு செய்து, நல்ல விலைக்கு விற்று லாபம் அடையலாம் என்றார்.
    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ. உதயகுமார், வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) வெ. தவமுனி, வேளாண்மை துணை இயக்குநர்மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்  கு. மணிசேகரன், வேளாண்மை உதவி இயக்குநர் ல. முத்துலட்சுமி, உதவி  செயற்பொறியாளர் வே. செவ்வேல் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
 

More from the section

சின்னமூப்பன்பட்டியில் சேதமடைந்த நிழற்குடையை சீரமைக்கக் கோரிக்கை
மகளிர் சுய உதவிக்குழுவினர் பொருள்கள் கண்காட்சி
விருதுநகரில் பிப். 26 இல் திமுக நிர்வாகிகள் கூட்டம்
ஆழ்துளைக் கிணற்றை ஆழப்படுத்தக் கோரிக்கை
சிவகாசி பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா