வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல்: போலியான பெயர்கள் சேர்க்கப்படுவதாக புகார்

DIN | Published: 19th February 2019 06:37 AM

தமிழக அரசு அறிவித்துள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர்களின் பட்டியலைத் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், வசதியானவர்களை பட்டியலில் சேர்த்தும்,  ஏழ்மை நிலையில் உள்ளவர்களது பெயர்களை சேர்க்க மறுப்பதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானத்திடம் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்த மனுக்களில் தெரிவித்திருப்பதாவது: வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை மக்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து வறுமைக் கோட்டுப் பட்டியலை சரி பார்க்கும் பணியில் கள அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பலருக்கு வீடு, நிலம் உள்ளிட்டவைகள் இருந்தும் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். ஆனால், ஏழை, எளிய மக்களின் பெயர்கள் அதில் இடம் பெறவில்லை. அரசு சார்பில் இலவச அரிசி பெறும் குடும்பத்தை கூட அப்பட்டியில் சேர்க்க மறுக்கின்றனர். அதேபோல், வறுமையின் காரணமாக கிராமப் பகுதிகளில் பலர் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகிறோம். எனவே எங்களது பெயர்களையும் இப்பட்டியலில் சேர்க்க வேண்டும் என செவல்பட்டி, மீசலூர், மூளிப்பட்டி, வரிசையூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் அதில் தெரிவித்திருந்தனர். 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கிராம மக்களிடம் தெரிவித்ததாவது: ஏற்கெனவே வறுமைக்கோட்டுப் பட்டியலில் உள்ளவர்கள் வசதி படைத்தவராக இருந்தால் அவர்களது பெயர் நீக்கம் செய்யப்படும். அதேநேரம் ஏழை எளியோர் பெயர்களை வறுமைக் கோட்டுப் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே அவர்கள் தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.


 

More from the section

விருதுநகர் அருகே லாரி மீது கார் மோதி கணவன், மனைவி சாவு
தனித்திறன் போட்டிகளில் அருப்புக்கோட்டை பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
விவசாயிகள் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்க்கக் கூடாது: மீன்வள உதவி இயக்குநர் அறிவுறுத்தல்
மறவர்பெருங்குடியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை திறக்கக் கோரிக்கை
அதிமுக வேட்பாளர் சாத்தூரில் வாக்கு சேகரிப்பு