21 ஏப்ரல் 2019

புதிதாக சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு விரைவில் வாக்காளர் அடையாள அட்டை:தேர்தல்  வட்டாட்சியர்

DIN | Published: 21st March 2019 07:07 AM

 விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 31 இல் வெளியிடப்பட்ட புதிய வாக்காளர்கள் 25 ஆயிரம் பேருக்கு மார்ச் 26 முதல் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என விருதுநகர் மாவட்ட தேர்தல் பிரிவு வட்டாட்சியர் லோகநாதன் தெரிவித்தார்.  
 விருதுநகர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் புதிய வாக்காளர் சேர்க்கை மற்றும் பெயர் நீக்கம், சேர்த்தல் தொடர்பான பணிகள் நடைபெற்றன. இதற்காக சிறப்பு முகாம்களும் நடைபெற்றன. இந்நிலையில், கடந்த ஜனவரி 31 இல் அனைத்து கட்சியினர் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 25 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்காக பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், மக்களவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு  மார்ச் 10 இல் வெளியானது. அதில், ஏப்ரல் 18 இல் தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப் பட்டது. 
இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதிய வாக்காளர்களாக பதிவு செய்த 25 ஆயிரம் பேருக்கு இதுவரை வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட வில்லை. இதனால், அடையாள அட்டை கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் இ சேவை மையங்களுக்கு அவர்கள் அலைந்து வருகின்றனர். அங்குள்ள அலுவலர்களோ அடையாள அட்டை வரவில்லை, வந்தவுடன் உங்களது செல்லிடபேசிக்கு குறுந்தகவல் வரும். அதைத் தொடர்ந்து இங்கு வந்து பெற்று கொள்ளலாம் என தெரிவித்தனராம். இதனால், தாங்கள் வாக்களிக்க இயலுமா என்ற அச்சத்தில் புதிய வாக்காளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 
 இதுகுறித்து தேர்தல் பிரிவு வட்டாட்சியர் லோகநாதன் கூறியது: விருதுநகர் மாவட்டத்தில் ஜனவரி 31 இல் வெளியிடப்படப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த புதிய வாக்காளர்களுக்கு மார்ச் 26 முதல் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், பிப்ரவரி 23, 24 இல் நடைபெற்ற சிறப்பு முகாம் மற்றும் தற்போது வரை மனு அளிக்கும் புதிய வாக்காளர்கள் அனைவருக்கும் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வழங்க வாய்ப்பு குறைவு. எனவே அவர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வழங்கப்படும். இவர்கள், பூத் சிலிப்புடன், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 13 அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என்றார்.

More from the section

திருச்சுழியில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்கு
விருதுநகர் அருகே பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயம்
ஆனைக்குட்டம் அணை வறண்டதால் விருதுநகருக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல்
சாத்தூர் அருகே பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு
ராஜபாளையத்தில் தி.க.வினர் ஆர்ப்பாட்டம்