வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

காரைக்காலுக்கு காவிரி நீர் கிடைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

DIN | Published: 12th September 2018 06:43 AM

காரைக்கால் பகுதிக்கு காவிரி நீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க  வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவனிடம் செவ்வாய்க்கிழமை விவசாய சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை மனு அளித்தனர். 
காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேரில் வேளாண் பணிகள் நடைபெற்று வருகிறது. காவிரி நீர் வரத் தொடங்கிய நிலையில், ஓரிரு ஆற்றில்  மட்டுமே காரைக்கால் பகுதி நோக்கி வந்தது. பரவலாக அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் வரவில்லை.  கடைமடைப் பகுதிக்கு முழுமையாக தண்ணீர் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதை களையவேண்டும் என தமிழக  விவசாயிகளும், காரைக்கால் விவசாயிகளும் தமிழக, புதுவை அரசை வலியுறுத்திவந்தனர்.
இந்நிலையில், முக்கொம்பு அணை உடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் வரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. காரைக்காலில் விதைப்பு செய்தவர்கள், நாற்றங்கால் தயார் செய்தவர்கள் காவிரி நீர் வரத்தின்மையால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
காரைக்கால் பிரதேச விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் எம். சிங்காரவேலு, ஏ.கே. முகம்மது யாசின், எம். கனகசுந்தரம், ஏ. ஞானசேகரன், மதனமாரிமுத்து ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவனை சந்தித்து, காரைக்காலுக்கு உடனடியாக காவிரி நீரை வரழைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். 
இச்சந்திப்பு குறித்து விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் கூறியது: மேட்டூர் அணை திறந்த பிறகு காரைக்காலுக்குள் காவிரி நீர் வந்தது. எனினும் தண்ணீர் முழுமையாக வரவில்லை. கிடைத்த தண்ணீரைக்கொண்டு விதைப்பு செய்தல், நாற்றங்கால் தயார் செய்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், முக்கொம்பு அணை உடைந்ததால், தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டது. தற்போது தண்ணீர் விடுவிக்கப்படுகிறது. 
தண்ணீர் விடுவிப்பு செய்து 2 நாள்களாகியும் காரைக்காலுக்குள் தண்ணீர் வந்துசேரவில்லை. புதுவைக்கான 7 டிஎம்சி காவிரி நீரை, மாதாந்திர விகிதாச்சார அடிப்படையில் பெறவேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு. தற்போது தண்ணீர் கிடைக்காவிட்டால், நாற்றங்கால் கருகும் நிலை உருவாகும். மேட்டூர் அணை 3-க்கும் மேற்பட்ட முறை நிரம்பியும், கடைமடைப் பகுதியான காரைக்காலுக்கு தண்ணீர் வராமல் இருப்பது வேதனையளிக்கிறது. 
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி புதுவைக்கான விகிதாச்சாரம் கிடைத்தாகவேண்டும். அதற்குரிய பணிகளை விரைந்து மேற்கொள்ள ஆட்சியரிடம் வலியுறுத்தினோம். பொதுப்பணித் துறை அலுவலர்களை அழைத்துப் பேசி, உடனடியாக தமிழக  அலுவர்களை தொடர்புகொண்டு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளார் என்றனர்.
 

More from the section

உழவர் திருநாள்: பாரம்பரிய கலை விழா கொண்டாட்டம்
துணை நிலை ஆளுநர் இன்று குறைகேட்பு
எம்ஜிஆர் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கடற்கரையில் காணும் பொங்கல் கொண்டாட்டம்
பணி நிரந்தரம் செய்ய அமைச்சரிடம் கோரிக்கை