புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

மாணவர்கள் சமுதாயத்துக்கு தொண்டு செய்ய வேண்டும்: தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம்

DIN | Published: 12th September 2018 06:52 AM

மாணவர்கள் சமுதாயத்துக்கு தொண்டு செய்ய வேண்டும்  என தருமபுரம் ஆதீன  26-ஆவது  குருமகா சந்நிதானம்  ஸ்ரீலஸ்ரீ ஷண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் கூறினார். 
தருமபுரம் ஆதீனம் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் மயிலாடுதுறை ஸ்ரீகுருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்   புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீகயிலை குருமணி நிலையத் திறப்பு விழா  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதிய கட்டடத்தை தருமபுரம் ஆதீன 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஷண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் திறந்து வைத்து அவர் வழங்கிய ஆசியுரையில் கூறியது: 
தருமையாதீனத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்குப் பாடங்களுடன் அறம் சார்ந்த சிந்தனைகள் போதிக்கப்படுவது என்பது கூடுதல் சிறப்பு. மாணவர்கள் கல்வியறிவில் சிறந்து விளங்குவதுடன், நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்யும் எண்ணத்தை பள்ளிப் பருவத்திலேயே வளர்த்துக் கொள்ளவேண்டும்.  தான் கற்ற கல்வி மூலம் சமுதாயத்துக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற மனப்பக்குவத்தை  உருவாக்கிக் கொள்ளவேண்டும். பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மதிப்பு மிக்கவர்களாக கருத வேண்டும் என்றார் அவர். 
தொடர்ந்து, பள்ளித் தாளாளர் சி.ஆர்.  குஞ்சிதபாதத்துக்கு கல்விக் காவலர் விருதை வழங்கி ஆசி வழங்கினார். தருமபுரம்  ஆதீன இளைய சந்நிதானம்  ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள்,  மயிலாடுதுறை கல்வி மாவட்ட  அலுவலர் குமரன், மெட்ரிக் பள்ளிகள் முன்னாள் ஆய்வாளர்  டி.ரமணி ஆகியோர் பேசினர். பள்ளி முதல்வர் ராஜேந்திரன், பள்ளி ஆட்சி மன்றக்குழுத் தலைவர் முருகேசன், செயலர் எஸ். பாஸ்கரன், நிர்வாகச் செயலர் வி. பாஸ்கரன் துணைத் தலைவர் ஞானசேகரன், பொருளர் டி. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More from the section

நாங்கூர் நூலகத்துக்கு மின் வசதி ஏற்படுத்தக் கோரிக்கை
பிரம்மபுரீஸ்வர சுவாமி கோயிலில் நெல் மகோத்ஸவம்
யோகா போட்டி:  வைத்தீஸ்வரன்கோயில் மாணவர்கள் சிறப்பிடம்
திருவெண்காடு கோயிலில் இந்திர திருவிழா: மருத்துவாசுரன் வதம் செய்யும் ஜதீக நிகழ்ச்சி
பழ மரங்கள் சாகுபடி குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி