புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற திமுக தமிழகத்துக்காக செய்தது என்ன? அமைச்சர் ஓ.எஸ். மணியன் கேள்வி 

DIN | Published: 22nd March 2019 09:32 AM

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த திமுக தமிழகத்துக்காக என்ன செய்தது என அமைச்சர் ஓ.எஸ். மணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகை மாவட்டம், சீர்காழி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக சார்பில், மக்களவைத் தேர்தல் செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான ஓ.எஸ். மணியன் பேசியது:
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடத்தியபோதும், பாஜக ஆட்சி நடத்தியபோதும் அந்த ஆட்சிகளில் திமுக அங்கம் வகித்தது. மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தது. அவ்வாறு இருந்தும் தமிழகத்துக்காக திமுக சாதித்தது என்ன? அவர்களது (திமுக) குடும்பத்துக்கு மட்டுமே லாபம் தேடிக் கொண்டார்கள்.
குறிப்பாக காவிரி மேலாண்மை ஆணையமாக இருக்கட்டும், முல்லைப் பெரியாறு, மேக்கேதாட்டு, கச்சத்தீவு என எந்த பிரச்னையாக இருந்தாலும் விட்டுக் கொடுத்தும், மறந்துவிட்டும் செயல்பட்டதுதான் திமுகவின் நிலைப்பாடு. 
தற்போது விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நாகை மாவட்டத்துக்கு இதுவரை ரூ.304 கோடி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 176 கோடி பட்டுவாடா ஆகிறது. மீதமுள்ள ரூ. 128 கோடியை காப்பீடு நிறுவனம் மூலம் நாம் பெற வேண்டும். கண்டிப்பாக அனைத்து விவசாயிகளுக்கும் பணம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுகவினர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது, விவசாய மண்டலமாக அறிவிக்க வேண்டும் என சொல்லி வருகின்றனர். மீத்தேனை எடுக்க உரிமம் வழங்கியது திமுக ஆட்சியில்தான். அதில் கையெழுத்திட்டது மு.க. ஸ்டாலின்தான். மீத்தேன் திட்டத்தைத் தடுத்து, தடை ஆணை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. திமுகவை பொருத்தவரை பிரச்னையைக் கிளறிவிட்டு, போராட்டம்  நடத்தும் வகையில் தூத்துக்குடி சம்பவம் போல் ரத்தக்களறியை ஏற்படுத்தி, பிணத்தை விழ வைத்து ஆதாயம் தேடுகிறது. 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 30-ஆம் தேதி சிதம்பரத்திலிருந்து பிரசார பயணத்தைத் தொடங்குகிறார். நாகை மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில் காலை 8.30 மணிக்கு பேசுகிறார். பின்னர் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை, பேரளம், நன்னிலம், திருவாரூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்துவிட்டு, நாகப்பட்டினம் தொகுதிக்கு செல்கிறார். இதில் கலந்துகொள்ளும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து திமுகவினர் தங்களது பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.
இது மக்களவைத் தேர்தல் அல்ல, வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலுக்கான அடிப்படைத் தேர்தல். வரும் ஜூன் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவோம் என நீதிமன்றத்தில் அரசு அறிவித்துள்ளது. ஆகையால், மத்தியில் அமைச்சரவை அமையும் முன்பே இங்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்துவிடும். எனவே, மக்களவைத் தேர்தலில் நாம் பெறும் வாக்குகளைப் பார்த்து, உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிட நினைக்கக் கூடாது. அந்த நிலையை நாம் உருவாக்க வேண்டும் என்றார் அமைச்சர்.
முன்னதாக, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசைமணி பேசினார். நிகழ்ச்சிக்கு,  சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி தலைமை வகித்தார். பாமக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஆ. பழனிசாமி, மாவட்டச் செயலாளர் ஆர்.அன்பழகன், பாஜக கோட்டப் பொறுப்பாளர் தங்க.வரதராஜன், மாவட்டத் தலைவர் ஜி.வெங்கடேசன், மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் க.அகோரம், தேமுதிக மாவட்டச் செயலாளர் ஜலபதி, மாநில விவசாய அணி துணைச் செயலாளர் பொன்.பாலகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் பூம்புகார் எம்.சங்கர், நகரத் தலைவர் கணிவண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வரதராஜன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.
அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் ராஜமாணிக்கம், நற்குணன், மாவட்டப் பொருளாளர் செல்லையன், ஜெ. பேரவைச் செயலாளர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேரூராட்சிமன்ற முன்னாள் துணைத் தலைவர் போகர்.ரவி வரவேற்றார். அதிமுக நகரச் செயலாளர் பக்கரிசாமி நன்றி கூறினார்.   
 

More from the section

வலிவலம் அம்மா விளையாட்டுப் பூங்கா சீரமைக்கப்படுமா ?
பாசன வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுநீர்: நோய் பரவும் அபாயம்
சீர்காழியில் மிதமான மழை
தனியார் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி
குண்டும், குழியுமான கிராம சாலை...!