21 ஏப்ரல் 2019

ஏர் கலப்பையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த விவசாயத் தொழிலாளி

DIN | Published: 23rd March 2019 01:43 AM

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில், தமிழக நிலம்- நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் போட்டியிடவுள்ள விவசாயத் தொழிலாளி, கையில் ஏர் கலப்பையுடன் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவந்தார்.
ஹைட்ரோ கார்பன், சாகர் மாலா திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும், விளைநிலங்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும், மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக நிலம்-நீர் பாதுகாப்பு இயக்கத்தினர் மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிகளில் தலா 100 வேட்பாளர்களை களம் இறக்கப் போவதாக  அறிவித்ததுடன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு 50 வேட்பாளர்களையும் ஏற்கெனவே அறிமுகப்படுத்தினர். 
இந்நிலையில், இவர்களில் முதல்கட்டமாக, இரண்டு வேட்பாளர்கள் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து, தரங்கம்பாடி வட்டம், கீழையூரைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி ஏ. சாமித்துரை (63) தமிழக  நிலம்- நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட வெள்ளிக்கிழமை  வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். 
அப்போது, அவர் அரை நிர்வாணக்கோலத்தில், கையில் ஏர் கலப்பையுடன் வந்ததைக் கண்ட போலீஸார், அலுவலகத்துக்குள் செல்ல அனுமதி மறுத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, ஏர் கலப்பையை  வெளியே விட்டுவிட்டு, சட்டையை அணிந்து வந்த சாமித்துரை, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய்க் கோட்ட அலுவலருமான இ.கண்மணியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

More from the section

வேளாங்கண்ணியில் புனித ஈஸ்டர் திருவிழிப்பு சிறப்பு வழிபாடு: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
அமமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன ஆராதனை
மின்னல் தாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு