புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

தொகுதி மாறி வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்...!

DIN | Published: 23rd March 2019 01:42 AM

நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிட, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான நாகை மாவட்ட ஆட்சியரிடம்  வேட்பாளர் ஒருவர் மனு தாக்கல் செய்ய வந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமாரும், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலராக மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் இ. கண்மணியும் செயல்பட்டு வருகின்றனர். நாகை மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக திருவாரூர் மாவட்ட ஆட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக திருவாரூர் வருவாய்க் கோட்டாட்சியரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டது முதல் வெள்ளிக்கிழமை வரை மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு 4 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த 4 மனுக்களும், மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்திலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் இதுவரை ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. 
இந்த நிலையில், நாகை மாவட்டம், வேதாரண்யம், நெய்விளக்கு பகுதியைச் சேர்ந்த ஜி. வேதரெத்தினம் என்பவர் ஊழல் ஒழிப்பு செயலாக்கக் கட்சி   (சுயேச்சை) வேட்பாளராகப் போட்டியிட,  நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.   வேட்புமனு தாக்கல் பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில், அவர் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனு நாகை மக்களவைத் தொகுதிக்கானது என்பது தெரியவந்தது. 
இதையடுத்து அவரது மனு உடனடியாக நிராகரிக்கப்பட்டு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டார். இந்த நிகழ்வு மாவட்ட ஆட்சியரகத்தில் சில நிமிடங்கள் சலசலப்பை ஏற்படுத்தியது.

More from the section

வலிவலம் அம்மா விளையாட்டுப் பூங்கா சீரமைக்கப்படுமா ?
சீர்காழியில் மிதமான மழை
தனியார் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி
குண்டும், குழியுமான கிராம சாலை...!
பாசன வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுநீர்: நோய் பரவும் அபாயம்