புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

விவசாயம், மீன்பிடித் தொழில் பாதுகாப்புக்கு நடவடிக்கை: கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராசு வாக்குறுதி

DIN | Published: 23rd March 2019 01:42 AM

விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்களின் பாதுகாப்புக்கு  தீவிரமாகப் பணியாற்றுவேன் என்று நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசு தெரிவித்தார்.
நாகையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: 
நான், நாகை தொகுதியின் மக்களவை உறுப்பினராக 3 முறை தேர்வுப் பெற்றிருந்தாலும், மிகக் குறுகிய காலங்களே மக்களவை உறுப்பினராகப் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது. 
இருப்பினும், கிடைத்த வாய்ப்பை மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலேயே பயன்படுத்தியுள்ளேன்.
காவிரி நடுவர்மன்றம் அமைய மக்களவையில் குரல் எழுப்பியுள்ளேன். 1997-இல் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட போது, மத்திய வேளாண் துறை அமைச்சரை டெல்டா மாவட்டங்களுக்கு அழைத்து வந்து, பாதிப்புகளைப் பார்வையிடச் செய்து, நிரந்தரத் தீர்வுக்கு வலியுறுத்தியதன் விளைவாக, மாதிரி பயிர்க் காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டம், இன்று வரை விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாகையில் எடுக்கப்படும் எண்ணெய்யை சென்னையில் சுத்திகரிப்பதற்கு பதிலாக, நாகையிலேயே சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கச் செய்ய வேண்டும் என நான் வலியுறுத்தியதன் விளைவாகவே சிபிசிஎல் நிறுவனம் நாகையில் அமைக்கப்பட்டது.
நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தால், ஹைட்ரோ கார்பன், ஷேல், மீத்தேன் போன்ற வேளாண்மையை அழிக்கும் திட்டங்களைத் தடுக்க உறுதியாக போராடுவேன். வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என்ற திமுகவின் வாக்குறுதியை நிறைவேற்றப் பாடுபடுவேன். நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வேளாண் துணை பொருள்களை மூலப்பொருள்களாகக் கொண்ட சிறுதொழில்களைத் தொடங்க நடவடிக்கை மேற்கொள்வேன்.
தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் இலங்கை கடற்படை தாக்குதல், சிறைபிடிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவும், கட்சத் தீவை மீட்கவும் மக்களவையில் உறுதியாக வலியுறுத்துவேன்.  நாகை துறைமுகத்தை மேம்படுத்தி, இழந்த பெருமையை மீட்டெடுக்க அழுத்தமாக வலியுறுத்துவேன். 
மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கை, வேளாண்மையை அழிக்கும் திட்டங்கள், விவசாயிகளைப் புறந்தள்ளும் போக்கு, சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்டவை மத்திய அரசு மீது மக்களுக்கு மிகப்பெரிய அளவில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள், வேலையில்லா பட்டதாரிகள் மாநில அரசால் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். எனவே, திமுக கூட்டணி நாகையில் மட்டுமல்லாமல், தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் என்றார் எம். செல்வராசு. 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஜி. பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் அ. சீனிவாசன், ஒன்றியச் செயலாளர் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

More from the section

வலிவலம் அம்மா விளையாட்டுப் பூங்கா சீரமைக்கப்படுமா ?
சீர்காழியில் மிதமான மழை
தனியார் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி
குண்டும், குழியுமான கிராம சாலை...!
பாசன வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுநீர்: நோய் பரவும் அபாயம்