புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

சம்பா சாகுபடிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறக்கக் கோரி சாலை மறியல்

DIN | Published: 12th September 2018 06:46 AM

சம்பா சாகுபடிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறக்கக் கோரி, திருவாரூர் அருகே உள்ள மாவூரில் சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடைமடை பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. இதனால், விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான முதல்கட்டப் பணிகளில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதால், சம்பா சாகுபடி பயிர்களைக் காக்க விரைவில் தண்ணீர் திறந்து, முறை வைக்காமல் விட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருவாரூர் அருகே மாவூர் கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 
 இதில் மாவூர், திருக்காரவாசல், பாலையூர், குன்னியூர் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பங்கேற்று, வெள்ளையாறு, பாண்டவையாறுகளில் முறை வைக்காமல் தண்ணீர் விட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 
திமுக ஒன்றியச் செயலாளர் புலிவலம் ஏ.தேவா தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலர் என்.டி. இடிமுரசு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்றனர். 
பாடைகட்டி போராட்டம்...
இப்போராட்டத்தின்போது, விவசாயி ஒருவரை பாடையில் படுக்க வைத்து, அவரருகே அழுது கோரிக்கையை வலியுறுத்தியபடி கோஷமிட்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இந்நிலையில், நிகழ்விடத்துக்கு வந்த பொதுப்பணித் துறையினர் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோரிக்கை தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தண்ணீர் வராவிட்டால் செப்.16-இல் முற்றுகைப் போராட்டம்...
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் கூறியது:
  மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து பல நாள்களாகியும் கடைமடை பகுதிகளுக்கு தேவையான அளவு தண்ணீர் வரவில்லை. தண்ணீர் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தற்போது தண்ணீரின்றி கருகி வருகின்றன. எனவே பாண்டவையாறு, வெள்ளையாறுகளில் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும் முறைவைக்காமல் தண்ணீர் விட வேண்டும்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அலுவலர்களுடன்  நடத்தியப் பேச்சுவார்த்தையில், செப்.15- ஆம் தேதிக்குள் இரு ஆறுகளிலும் தலா 800 கனஅடி நீர் வீதம் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதிகாரிகள் உறுதியளித்தப்படி தண்ணீர் திறக்கப்படவில்லையெனில் செப்.16-ஆம் தேதி பொதுப்பணித் துறை அலுவலர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றார்.

More from the section

"முதல் மதிப்பெண்ணை விட முதல் மதிப்பெண் எடுப்பவரை ஜெயிக்க வேண்டும்'
ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் மாசி மகத் தீர்த்தவாரி
திறன் வளர்ப்புப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு
பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவே நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஆர். காமராஜ்
நெல் கொள்முதல் செய்வதை அதிகப்படுத்த விவசாயிகள் கோரிக்கை