வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

தேசிய இளைஞர் விருதுக்கு 15- க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

DIN | Published: 12th September 2018 06:50 AM

தேசிய இளைஞர் விருதுக்கு ஆன்லைனில் செப்.15- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தேசிய அளவிலான இளைஞர் விழாவில் மத்திய அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கானப் பணிகளை சிறப்பாக செய்துவரும் இளைஞர்களுக்கும் (15 வயது முதல் 29 வயது வரை) மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கும் தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2016-17 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இளைஞர் நல பணிகளுக்காக விருதுகள் இந்த நிதியாண்டில் தகுதியுள்ளோருக்கு வழங்கப்பட உள்ளன.
இளைஞர்களுக்கு...
 இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். குறிப்பிட்டுள்ள நிதியாண்டில் வயது 15-லிருந்து 29- வயதுக்குள் இருக்க வேண்டும். சமூகப் பணியில் அதிக ஆர்வம் மற்றும் சமூக பணியாற்றியிருக்க வேண்டும். வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே இந்த விருது வழங்கப்படும். மத்திய அரசு, மாநில அரசு, பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் மற்றும் இதர அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், இந்த விருது பெற விண்ணப்பிக்க இயலாது. தேசிய விருதுடன் ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் பதக்கம் 25 நபர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு...
 பதிவு துறை சட்டம் 1860-இன் படி கடந்த மூன்றாண்டுகளுக்கான அமைப்பு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நிர்வாகக் குழுவின் அதிகாரங்கள் அமைப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். சமூக நலன் சார்ந்த திட்டங்களை, அறிவார்ந்த தன்மையுடன் மேம்படுத்தி, தன்னார்வத்துடன் ஈடுபடும் தகுதியை பெற்றவர்களாக இருக்க வேண்டும். எவ்வித லாப நோக்கத்துடன் தொண்டு பணிகள் ஆற்றியிருக்கக் கூடாது. குறிப்பிட்ட சாதி, சமய அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.
குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது இளைஞர்களை சமுதாயப் பணிகளில் ஈடுபடும் வகையில் சிறப்பான சேவையாற்றி இருக்க வேண்டும். இதற்கு முன் இவ்விருது பெற்ற தொண்டு நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது. சமுதாய நலப்பணிகளில் ஈடுபட்டு தொண்டாற்றியப் புகைப்படம் மற்றும் செய்திக் குறிப்பு மற்றும் இதர ஆவணங்களுடன் சான்றொப்பம் இட்ட ஆதாரங்கள் இணைக்கப்படவேண்டும். தேசிய விருதுடன் ரூ.2 லட்சம்  ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.
 எனவே 2016-17-ஆம் ஆண்டு சமூக நலனில் சிறப்பாக தொண்டாற்றிய இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மேற்கண்ட விருதுக்கு in‌n‌o‌v​a‌t‌e.‌m‌y‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதள முகவரிக்கு 15.09.2018-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

More from the section

நாளை வாக்காளர் பட்டியல் பெயர் திருத்த சிறப்பு முகாம்
சாலையை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
உயிர் வேதியியல் கருத்தரங்கில் மகளிர் கல்லூரி மாணவியர் சிறப்பிடம்
அரசுப் பள்ளியில் தாய் மொழி நாள் விழா
வேலை நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்