திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

ரூ. 33.80 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்ட  கூட்டுறவு சங்கச் செயலர் மீது நடவடிக்கைக் கோரி முற்றுகை

DIN | Published: 12th September 2018 06:45 AM

மன்னார்குடி அருகே தொடக்க  வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத்தில் ரூ.33.80 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்ட சங்கச் செயலர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே மூவர்கோட்டையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத்தில், செயலராக மணிவேல் என்பவர் இருந்தபோது, உறுப்பினர் சேர்க்கை பணம், பயிர்க் காப்பீட்டு பணம் வழங்குதல், நகை ஏலம், சேமிப்பு கணக்கு பராமரிப்பு உள்ளிட்ட பல வகையில் ரூ. 33.80 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இதற்கு சில அலுவலர்கள் உடந்தையாக இருந்திருப்பதாகவும், உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியதொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மூவர்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு அப்பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமையில், சங்க உறுப்பினர்கள், விவசாயிகள், மகளிர்சுய உதவிக்குழுவினர் என 200-க்கும் மேற்பட்டோர் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 தகவலறிந்து அங்கு வந்த, கூட்டுறவுத் துறை சார் பதிவாளர் தியாகராஜன் முற்றுகையில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதில், செயலராக இருந்த மணிவேல் பல்வேறு வகையில் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 33.80 லட்சம் அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது, துறைவாரியாக நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும், இதுகுறித்து சட்டப்படியாக மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிய தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.


 

More from the section

வீரவநல்லூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தைப்பூச உத்ஸவம்
விவசாய நிலங்களை பாலைவனமாக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
அச்சுதமங்கலம் அம்மன் கோயிலில் தை மாத பௌர்ணமி யாகம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திட்டவட்டம்
திருமுறை பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்