செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

ஊடகங்கள் வழக்கு விசாரணை நடத்துவது போல் செயல்படுவதை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தாக்கு

DIN | Published: 12th September 2018 12:59 AM

ஊடகங்கள் வழக்கு விசாரணை நடத்துவது போல் செயல்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், ஊடகங்களுக்கு சரியான எல்லையை வகுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் உள்ள அரசு உதவி பெறும் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், வழக்கின் விசாரணை குறித்து ஊடகங்கள் செய்தி எதுவும் வெளியிடக் கூடாது என்று பாட்னா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில், "பாட்னா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, "ஊடகங்களுக்கு எந்தத் தடையும் விதிக்கக் கூடாது' என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உள்ளது. எனவே, உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவின் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோக்குர், தீபக் குப்தா ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பாக வாதாடிய மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்தே, "உயர் நீதிமன்றம் கண்மூடித்தனமாக ஊடகங்கள் மீது தடை உத்தரவை பிறப்பித்துள்ளது' என்று தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதிகள் தெரிவித்ததாவது:
இது கையாள்வதற்கு மிக எளிதான விவகாரம் இல்லை. ஊடகங்களுக்குத் தடையேதும் விதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும், சில சமயங்களில் அவை எல்லை தாண்டி செயல்பட்டு வருகின்றன. ஊடகங்களுக்கும், அரசுக்கும், நீதிமன்றங்களுக்கும் இடையே சமநிலை நிலவ வேண்டும். 
மனதில் தோன்றியவற்றை எல்லாம் ஊடகங்கள் வெளியிட முடியாது. வழக்கு விசாரணைக்கு உளவியல் ஆலோசகர்களின் உதவியையும், குழந்தைகள் நல மருத்துவரின் உதவியையும் விசாரணை ஆணையம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஊடகங்களே பாதிக்கப்பட்ட சிறுமிகளை நேரடியாக பேட்டி எடுப்பது என்பதை அனுமதிக்க முடியாது. வழக்கு விசாரணை நடத்துவது போல் அவை செயல்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. 
ஊடகங்களுக்கும் சரியான எல்லையை வகுக்க வேண்டும் என்று கூறி, இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு பிகார் அரசுக்கும், சிபிஐ-க்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, அச்சிறுமிகளிடம் விசாரணை நடத்த பெண் வழக்குரைஞர் ஒருவரை நியமனம் செய்த பாட்னா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பெண் வழக்குரைஞர் நியமனம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரண்பாடாக உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

More from the section

விதி மீறும் பேருந்துகள் மீது நடவடிக்கை: தில்லி போக்குவரத்து துறை முடிவு
தலைநகரில் இருந்து பிற மாநில நகரங்களுக்கு மீண்டும் பேருந்து சேவை: தில்லி போக்குவரத்து நிறுவனம் திட்டம்
"30 ஹோட்டல்களின் சுகாதார உரிமம் ரத்து'
தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரி மக்களிடம் பிரசாரம்: ஆம் ஆத்மி முடிவு
பல்பொருள் அங்காடியில் கொள்ளை: ஒருவர் கைது