சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

விழாக்களால் பண்பாடு, கலாசாரம் பாதுகாக்கப்படுகிறது: மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர்

DIN | Published: 22nd January 2019 01:50 AM

இந்தியாவில் திருவிழாக்களால் பண்பாடும், கலாசாரமும் பாதுகாக்கப்படுகிறது என்றார்  மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வின் குமார் செளபே.
குமரி மாவட்டம் அருமனையில் இந்து சமுதாயங்களும்,  ஆலயக் குழுக்களும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை  நடத்திய பொங்கல் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் மேலும் பேசியதாவது: இந்திய நாடு விழாக்களுக்கான தேசம்.  இங்கு விழாக்கள் மூலம் இறைவனை வழிபடுவதுடன்,  நமது பண்பாடும்,  கலாசாரமும் பாதுகாக்கப்படுகிறது.  
பொங்கல் விழா மூலம் விவசாயிகளையும், விவசாயத்தையும், கால்நடைகளையும், இயற்கையும், சூரியனையும் நாம் பெருமைப்படுத்துகிறோம்.  2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் வகையில் மத்திய அரசு திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது.  
நாட்டில் சுகாதாரத்தைப் பேணும் வகையில் தூய்மை இந்தியா என்ற தாரக மந்திரத்தை வகுத்து செயல்பட்டு வருகிறோம்.  ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் வசதிக்காக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம்.  இதுவரை 10 கோடியே 75 லட்சம் குடும்பங்களுக்கு காப்பீடு வசதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும்  ரூ. 5 லட்சத்துக்கான மருத்துவ உதவி கிடைக்கும்.   காப்பீடு அட்டை மூலம் இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்.  
நாட்டில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வகையில் 1.50 லட்சம் சுகாதார மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதுவரை 15 ஆயிரம் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.  
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது.  மதுரையில்  ரூ. 1100 கோடி மதிப்பில்  எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது.   நாட்டில் மேலும் 15  எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார் அவர். 
விழாவுக்கு, விழாக் குழுத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.  குரு சிவசந்திரன், பெருங்குளம் செங்கோல் ஆதீனம்  சிவபிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள்,   தமிழக பாஜக அமைப்புச் செயலர் கேசவ விநாயகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மதன் நன்றி கூறினார்.
 

More from the section

தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தி குமரியில் இருந்து சென்னைக்கு பிரசாரப் பயணம்
முகிலன்குடியிருப்பில் துறைமுக எதிர்ப்பு மக்கள் இயக்கக் கூட்டம்
மார்த்தாண்டம் அருகே 455 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்
குலசேகரம்  அருகே மோட்டார் சைக்கிள்  மோதி முதியவர் சாவு
"இலவச  இசைக்கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம்'