21 ஏப்ரல் 2019

குமரி அருகே 4 வயது சிறுவன் கடத்திக் கொலை

DIN | Published: 19th March 2019 08:26 AM

கன்னியாகுமரி அருகே கடன் பிரச்னை தொடர்பாக 4 வயது சிறுவன் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
கன்னியாகுமரியை அடுத்த மீனவர் கிராமமான ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கிய கெபின்ராஜ் (35),  மீனவர். இவரது மனைவி சரண்யா (35). இவர்களது மகன் ரெய்னா (4). ஆரோக்கிய கெபின்ராஜின் தாய் மேரி, அதே ஊரைச் சேர்ந்த அந்தோனிசாமி (40) என்பவரிடம் ரூ. 58 ஆயிரம் கடன் பெற்றதாகவும், கடனை திருப்பிச் செலுத்துவதில் இவர்களது குடும்பத்தினருக்கும், அந்தோனிசாமிக்கும் இடையே பிரச்னை இருந்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தோனிசாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சரண்யாவின் மகன் ரெய்னாவை பைக்கில் கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து சரண்யா கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப் பதிந்த போலீஸார், தனிப்படை அமைத்து அந்தோனிசாமியையும், சிறுவனையும் தேடிவந்தனர். இதனிடையே, திங்கள்கிழமை காலை கன்னியாகுமரியை அடுத்த முகிலன் குடியிருப்பு கடற்கரைப் பகுதியில் ஒரு தென்னந்தோப்பில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் சிறுவன் சடலம் மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் தென்தாமரைகுளம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்குச் சென்ற காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சடலமாக கிடந்தது சிறுவன் ரெய்னா என்பதும், கடன் பிரச்னையில் சிறுவனை அந்தோனிசாமி கடத்திச் சென்று தண்ணீர்த் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததும் தெரியவந்தது.
இதனிடையே, அந்தோனிசாமியை தனிப்படை போலீஸார் கேரள மாநிலம், பாலக்காடு பகுதியில் கைது செய்தனர். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from the section

திருவட்டாறில் ஆதிகேசவப் பெருமாளுக்கு ஆறாட்டு
நாகர்கோவில் கட்டடப் பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள்தேர்வு
குமரி தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர்களை உடனே பட்டியலில் சேர்க்க எம்எல்ஏ வலியுறுத்தல்
மலையாள பின்னணிப் பாடகர் கமுகற புருஷோத்தமன் பிறந்தநாள் விழா