புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

அய்யனார்குளத்தில் பராமரிப்பின்றி அழிந்து வரும் சங்க கால சமணப் படுகைகள் பாதுகாக்கப்படுமா?

By கு.அழகியநம்பி| DIN | Published: 15th August 2018 07:44 AM

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அய்யனார்குளத்தில் அழிந்துவரும் சங்க கால சமணப் படுகைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, விழுப்புரம்  உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் உள்ள மலைகளில் சமணப் படுகைகள் காணப்படுகின்றன. இவற்றில் சில பாதுகாக்கப்பட்டும், பல பராமரிக்கப்படாமலும், பாதுகாக்கப்படாமலும் உள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் கழுகுமலை, வீரசிகாமணி, சீவலப்பேரி அருகே உள்ள மறுகால்தலை உள்ளிட்ட இடங்களில் சமணப் படுகைகள் உள்ளன. அந்த வரிசையில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அய்யனார்குளம் கிராமத்தில் கண்டறியப்பட்ட ஒரு சமணப் படுகை பராமரிக்கப்படாமலும் பாதுகாக்கப்படாமலும் உள்ளது. இங்கு சில கல்வெட்டுகளும், வடிவங்களும் உள்ளன. கல்வெட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்ட குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவிகள், இந்தக் கல்வெட்டு குறித்து முதன்முதலில் பதிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து பல்வேறு கல்வெட்டு மற்றும் சமணப் படுகை ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
இது குறித்து கல்வெட்டு ஆராய்ச்சி ஆர்வலர் அரியப்புரத்தை சேர்ந்த பொன் கார்த்திகேயனிடம் கேட்டபோது அவர் கூறியது: தமிழர்களின் வழிபாடு என்பது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து திணைகளையும் அதற்கான தெய்வங்களான முருகன்,  மாயோன், இந்திரன், வருணன், கொற்றவை ஆகியோரையும் சார்ந்தே இருந்தது. இந்நிலையில் கி.மு. 3ஆம் நூற்றாண்டு காலத்தில் சந்திரகுப்தர் தற்போதைய கர்நாடகப் பகுதியில் தங்கியிருந்து அங்கிருந்து பல சமணத் துறவிகளைத் தமிழர்களின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி சமண மதத்தைப் பரப்பும் பணியை மேற்கொண்டார். அவ்வாறு வந்த சமணத் துறவிகள் பல்வேறு இடங்களுக்கும் சென்று சமண மதத்தைப் பரப்பினர். அவர்கள் பெரும்பாலும் குடியிருப்புகளுக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளில் அமைந்துள்ள குகைகளில் தங்கியிருந்தனர். அவ்வாறு குகை அமைத்துக் கொடுத்தவர்கள் பற்றிய பதிவுகளை பெரும்பாலான படுகைகளில் சமணத் துறவிகள் கல்வெட்டு மூலம் பதிவு செய்துள்ளனர்.
கல்வெட்டுகள் பெரும்பாலும் பிராமி எழுத்துகளாகவே உள்ளன. தமிழ்நாட்டில் காணப்படும் பிராமி எழுத்துகள் தமிழி அல்லது தமிழ் பிராமி எனப்படுகின்றன. அந்த வகையில் அம்பாசமுத்திரம் பகுதிக்கு வந்த சமணத் துறவிகள், அருகே உள்ள அய்யனார்குளம் பகுதியில் உள்ள ஒரு குகையில் படுகைகளை அமைத்துக் கொண்டனர். அவை ராஜா பாறை, நிலாப் பாறை என்று அந்தப் பகுதி மக்களால் இன்றும் குறிக்கப்படுகின்றன. ராஜா பாறையில் அமைந்துள்ள படுகையில் பிராமி எழுத்துகளில் வரையப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. குகையின் உள்புறத்தில் காணப்படும் கல்வெட்டில்  "பள்ளி செய்வித்தான் கடிகை கோவின் மகன் பெருங்கூற்றன்' என்றும், அருகிலுள்ள நிலாப் பாறையின் மேற்புறத்தில் உள்ள கல்வெட்டில் "குணாவின் ளங்கோ செய்பித பளிஇ'  என்றும் காணப்படுகிறது. மேலும் கல்வெட்டுகளின் அருகே படுக்கை போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவை கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் அம்பாசமுத்திரம் குறித்து சுற்றுப் புறங்களில் காணப்படும் கல்வெட்டுகளில் உள்ள இளங்கோய்க்குடி என்ற பெயரை உறுதிப்படுத்தும் வகையில் இங்கும் செய்தி காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த சமணப் படுகையை சில நாள்களுக்கு முன் மதுரை ஜெயின் சங்கத்தினர் அடையாளப்படுத்தி, கடையம் அம்பாசமுத்திரம் பிரதான சாலையிலிருந்து சமணப் படுகை வருவதற்கு வழிகாட்டும் பலகைகளை அமைத்துள்ளனர்.
ஆனால் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளதால் தற்போது உள்ள படிமங்களும் அழியும் நிலை உள்ளது. எனவே இந்தக் கல்வெட்டுகளை உடனடியாகத் தொல்லியல் துறையினர் பராமரித்துப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான கல்வெட்டுகள், பதிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஏராளமான கல்வெட்டுகள், பதிவுகள் கண்ணுக்குப் புலப்படாமலும், விழிப்புணர்வு இல்லாமலும் அழிக்கப்பட்டுள்ளன. கண்ணுக்குப் புலப்பட்ட பதிவுகளை முறையாகப் பதிவு செய்வதோடு, பராமரித்து பாதுகாப்பதன் மூலம் தமிழர்களின் தொன்மங்கள் சந்ததியினருக்குக் கொண்டு செல்லப்படும்.
ஓர் இனத்தின் வளர்ச்சிக்கு அந்த இனத்தின் வரலாறு மிகவும் முதன்மையானதாகும். அவற்றைப் பேணிப் பாதுகாப்பது அரசு மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் கடமை. 
எனவே அய்யனார்குளம் பகுதியில் உள்ள சமணப் படுகையை சமூக விரோதிகளிடமிருந்தும் இயற்கை இடர்பாடுகளிலிருந்தும் பாதுகாக்க வேண்டும்.
 அய்யனார்குளம், மன்னார்கோவில், பிரமதேசம் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்து புதைந்துள்ள வரலாற்றை வெளிக்கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
 

More from the section

மேலப்பாளையத்தில் அடிக்கல் நாட்டு விழா
பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
சிறப்பு நிதியுதவித் திட்ட பதிவேற்றப் பணிகள்: நெல்லையில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
மார்ச் 10இல் போலியோ சொட்டு மருந்து முகாம்
பேட்டையில் அமைதிப் பேரணி