புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

சாகுபடிக்கு சவாலாக இருக்கும் அமலைச் செடிகள்

By சா. ஷேக் அப்துல் காதர்| DIN | Published: 12th September 2018 09:37 AM

பாசனக் கால்வாய்களில் அதிகளவில் வளர்ந்து ஆக்கிரமித்துள்ள அமலைச்செடிகள் மற்றும் தனியார் ஆக்கிரமிப்புகளால் சாகுபடி செய்வது சவாலாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தாமிரவருணி பாசனத்தில் நெல், வாழை, பயறு வகைகள் போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. அணைகளில் இருந்து பாசனக் கால்வாய்கள் வழியாக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. பாபநாசம் அணையின் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 11 கால்வாய்கள் வழியாக 86,107 ஏக்கர் நிலங்களும், மணிமுத்தாறு அணையின் மூலம் பிரதான கால்வாய், பெருங்கால் பாசனம் மூலம் 25,834 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன.
நிகழாண்டு கார் பருவ சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் மூலம் பாசனம் பெற்று வரும் நிலங்களுக்கு விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி கால்வாய், பாளையங்கால்வாய், கோடகன் கால்வாய், கன்னடியன் கால்வாய், வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலக் கால்வாய், கீழக் கால்வாய், ஸ்ரீவைகுண்டம் தெற்கு பிரதான கால்வாய், வடக்கு பிரதான கால்வாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களாக கோடகன், திருநெல்வேலி கால்வாய்களில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் திறக்கப்படும் தண்ணீர் போதுமானதாக இருந்தபோதிலும் கடை மடை பாசனத்துக்கு தண்ணீர் எட்டாத சூழல் உள்ளது.
ஆக்கிரமிப்புகள்: பாசனக் கால்வாய்களில் அதிகளவில் வளர்ந்து ஆக்கிரமித்திருக்கும் அமலைச் செடிகள் மற்றும் காட்டாமணக்கு செடிகள் நீரோட்டத்துக்கு தடையாக உள்ளது. மடைகளுக்கு தண்ணீர் எட்டாததால், விளைநிலங்களுக்கு தேவையான நீரை பாய்ச்சுவது சவாலாக உள்ளது. 
பாசனக் கால்வாய்கள், நீர் நிலைகளின் கரையோரங்களில் ஆக்கிரமித்து நிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் கால்வாய் கரைகள் சுருங்கிவிட்டன. விளைநிலங்களுக்கு இடுபொருள்களை மாட்டு வண்டிகளில் கொண்டு செல்ல முடிவதில்லை. ஆகவே, கால்வாய் கரைகளில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் வேலுமயில் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகள், கால்வாய் தூர் வாருதல் போன்ற பணிகள் நடைபெறவில்லை. கால்வாய்களில் ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளால் கடை மடைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் பெரும் சவால் உள்ளது என்றார்.
விவசாயிகள் சங்க செயலர் ஆர். கசமுத்து கூறியது:  நீர் நிலைகள், கால்வாய்கள், குளங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பருவ மழை அதிகமாக பெய்தாலும் விவசாயிகள் நம்பிக்கையோடு சாகுபடி செய்ய முடியவில்லை. பாசனத்துக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் 9 கால்வாய்களில் தண்ணீர் திறந்தபோதிலும்,  கடை மடைகளுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை நீடிக்கிறது. எனவே குளங்கள், கால்வாய்களில் முழு அளவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
விவசாயி சுப்பையா கூறியது: தாமிரவருணி நதியின் முதல் பாசனக் கால்வாயான வடக்கு கோடைமேலழகியான் கால்வாய் கரையில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. அமலைச் செடிகளால் தண்ணீர் செல்ல முடியாத சூழலில் பாசன மடைகள் வழியாக வயல்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் தடை  உள்ளது. இரவு பகலாக மடைகளில் காத்திருந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. கால்வாயில் ஆங்காங்கே தேங்கியிருக்கும் அமலைச்செடிகளை விவசாயிகளை தங்களது சொந்த செலவில் அகற்றி தண்ணீர் பாய்ச்சி வருகிறோம் என்றார்.
கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்த விவசாயி முத்துப்பாண்டி கூறியது: கன்னடியன் கால்வாய் பாசனத்தில் சேரன்மகாதேவிக்கு கிழக்கே பாசனத்துக்கு தண்ணீர் முழுமையாக கிடைப்பதில்லை. இப்பாசனத்தில் கடைசி குளமான கொத்தன்குளத்துக்கு தண்ணீர் கிடைத்தால்தான் பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம், பிரான்சேரி பகுதியில் முழு அளவில் விவசாயம் செய்யலாம் . தண்ணீர் கிடைக்காத சூழலில் வாழைப்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மின்மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சுகின்றனர் என்றார்.


அமலைச் செடிகளை அகற்ற நடவடிக்கை
தாமிரவருணி பாசன வடிநில கோட்ட செயற்பொறியாளர் சொர்ணகுமார் கூறியது:  திருநெல்வேலி மாவட்டத்தில் கால்வாய்களில் பாசனத்துக்கு தடையாக இருக்கும் பகுதியில் அமலைச் செடிகள், கால்வாயில் படர்ந்திருக்கும் பாசி ஆகியவற்றை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
கடந்த 3 தினங்களாக பாளையங்கால்வாயில் தண்ணீரை நிறுத்தி இப்பணி நடைபெற்றது. தற்போது திருநெல்வேலி கால்வாயில் தண்ணீரை  நிறுத்தி, நயினார்குளம், குன்னத்தூர், கருங்காடு பகுதியில் அமலைச்செடிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஆக்கிரமித்திருக்கும் அமலைச் செடிகளை அகற்றும் பணி அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், திரும்பத் திரும்ப வளர்ந்து ஆக்கிரமித்து வருகிறது எனக் குறிப்பிட்டார்.

 

More from the section

"தேசிய போட்டிகளில் வென்ற மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்'
தாமிரவருணி-கருமேனி ஆறு-நம்பியாறு இணைப்பு: ரூ.216.37 கோடியில் 3ஆம் கட்டப் பணி தொடக்கம்
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்
பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்
பாளை. கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு