திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு ஆட்சியரிடம் மனு

DIN | Published: 11th September 2018 08:07 AM

குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தோர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் சந்தீப் நந்தூரி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது, கயத்தாறு அருகேயுள்ள கரடிகுளம் சிஎஸ்ஆர் காலனி இந்திராகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பெண்கள் அளித்த மனு :
 அரசு அமைத்து கொடுத்த இந்திரா குடியிருப்பில் 40 குடும்பங்கள் வசித்து வருகிறோம்.      ஆனால், எங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தராததால், நாங்கள் "வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தில் கால்நடைகளுக்காக அமைக்கப்பட்ட போர்வெல் உப்பு நீரை இதுவரை பயன்படுத்தி வருகிறோம்.  தற்போது அதிலும் தண்ணீர் இல்லாததால் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகிறோம். எனவே, தங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை வசதி கேட்டு மனு: தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 17 ஆவது வார்டு பாக்கியநாதன்விளை 3 ஆவது தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு : தங்கள் பகுதியில் 60 வீடுகள் உள்ளது. ஆனால் அனைத்து வீடுகளுக்கும் அடிப்படை வசதியான குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி எதுவுமின்றி சிரமபட்டு வருகிறோம். எனவே, தங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கோயில் வேண்டாம்: முறப்பநாடு ஊர் மக்கள் சார்பில் காந்திமதிநாதன் தலைமையில், ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு: நவகைலாயங்களில் குரு ஸ்தலமான முறப்பநாடு அருள்மிகு கைலாசநாதர் கோயிலும், சொக்கலிங்கசுவாமி கோயிலும் உள்ளன. தாமிரவருணி புஷ்கர விழாவை முன்னிட்டு எங்கள் ஊரில் புதிதாக சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து ஒரு கோயிலை உருவாக்கவும் சிலர் முடிவெடுத்து செயல்படுகிறார்கள்.
 மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையிட்டு மகாபுஷ்கர விழாவை அறநிலையத்துறைக்கு சொந்தமான கைலாசநாதர் கோயில் நதிக்கரையில் நடத்தவும், தனியாக சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய முயற்சிப்பதை தடுக்கவும் வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்மாய் ஆக்கிரமிப்பு: ஓட்டப்பிடாரம் வட்டம், வடக்கு கல்மேடு பகுதி மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:  வடக்கு கல்மேடு கண்மாய் மொத்தம் 74 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது 20 ஏக்கர் நிலம் மட்டுமே மிஞ்சியுள்ளது. வருவாய்துறை பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால், சம்மாங்குளம் என்ற வடக்குகல்மேடு கால்வாயின் பரபரப்பு நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது. 
அடுத்த தலைமுறைக்கு கண்மாய் என்ற ஒன்று இருக்குமா என கேள்விக்குறி உள்ளது. எனவே உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீர்பிடிப்புகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள தனியார் சிலரின் பிடியில் இருந்து மீட்டுத் தரும்படி கேட்டு கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை பாதிமா பாபு மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:  ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், அந்த ஆலை நிர்வாகத்தினர் சமூக நலப் பணிகள் என்ற பெயரில் பொதுமக்களிடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
 இதனால் அந்த ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் உருவாகி வருகிறது. சமூக நலப்பணிகள் என்ற பெயரில் ஸ்டெர்லைட் நிர்வாகம் பதற்றத்தை ஏற்படுத்த முயல்வதற்கு மாவட்ட ஆட்சியர்  தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from the section

தூத்துக்குடியில் எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு சைக்கிள் பேரணி


வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 1500 பெண்களின் திருமணத்துக்கு 12 கிலோ தங்கம் வழங்கல்: ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜன.29இல் தொழில் முனைவோர் பயிற்சி முகாம்
"பிறப்பு, இறப்புச் சான்று தாமதம்: தேமுதிக ஜன. 23இல் சாலை மறியல்'