புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம்

DIN | Published: 11th September 2018 08:08 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சியினர் மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட 55 பேர் கைது: மார்க்சிஸ்ட் சார்பில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்டச் செயலர் கே.எஸ். அர்ஜூனன் தலைமையில்  மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து,  9 பெண்கள் உள்ளிட்ட 55 பேரை மத்திய பாகம் போலீஸார் கைது செய்தனர். 
ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்டம் சார்பில்,  சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே  மாநகர் மாவட்டத் தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலர் ஆனந்தசேகரன், மதிமுக மாநில மீனவரணிச் செயலர் நக்கீரன், மாவட்ட துணைச் செயலர் வீரபாண்டி செல்லச்சாமி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
கோவில்பட்டி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில்  கோவில்பட்டியில் கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது.  ஆனால்,  எந்தவொரு கடையும் அடைக்கப்படவில்லை.   பெரும்பாலான தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டிருந்தன. தினசரி சந்தை உள்பட அனைத்து கடைகளும் வழக்கம்போல் இயங்கின. இதுபோல, கழுகுமலை, கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளிலும் கடையடைப்புப் போராட்டம்  நடைபெறவில்லை. கடம்பூரில் 95 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  இதில்,  மாவட்டச் செயலர்கள் ஆர்.எஸ்.ரமேஷ் (மதிமுக), அழகுமுத்துப்பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), நகரச் செயலர்கள் முருகன் (மார்க்சிஸ்ட்),  கருணாநிதி (திமுக), தமாகா இளைஞரணித் தலைவர் கனி உள்பட திரளானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 19  பெண்கள் உள்பட 165 பேரை போலீஸார் கைது செய்தனர்.  
வில்லிசேரியில்: கோவில்பட்டியையடுத்த வில்லிசேரி விலக்கில் காங்கிரஸ் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்,. சம்பவ இடத்திற்கு சென்ற கயத்தாறு போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்ட 8  பேரையும் கைது செய்தனர். 
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவில்பட்டி நகரத் தலைவர் ராஜகோபால் தலைமையில்  ரயில் மறியலில் ஈடுபட ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதையடுத்து, ரயில் நிலையம் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மறியலில் ஈடுபட முயன்றதாக 13 பேரை போலீஸார் கைது செய்தனர். 
கடையடைக்க வற்புறுத்தல்;  தகராறு: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து  கோவில்பட்டியில்  சாலை மறியலில் ஈடுபட   காங்கிரஸ்  உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் அண்ணா பேருந்து நிலையம் முன்பு திரண்டனர். 
அப்போது, காங்கிரஸ் நிர்வாகிகள் அண்ணா பேருந்து நிலையம் அருகே திறந்து  இருந்த கடையை அடைக்க வற்புறுத்தினராம். இதையடுத்து, கடை ஊழியர்களுக்கும், கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.  தகவலறிந்தவுடன் டி.எஸ்.பி. ஜெபராஜ், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் விநாயகம் தலைமையில் போலீஸார் அங்கு சென்று சமரசம் செய்தனர். அதையடுத்து, அண்ணா பேருந்து நிலைய பகுதியில் உள்ள கடைகள் சுமார் அரை மணி நேரம் அடைக்கப்பட்டன.  
ஆறுமுகனேரி: ஆத்தூரில்  திங்கள்கிழமை   காலை முதல் மாலை 6 மணி வரை ஆத்தூர் பகுதியில் சுமார் 400 கடைகள் மூடப்பட்டிருந்தன.      ஆத்தூரில் முழு கடையடைப்பு நடந்ததால்  மெயின்ரோடு பஜார் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் நல்லகண்ணு தலைமையில்  ஆழ்வார்திருநகரி வட்டாரத் தலைவர் கோதண்டராமன், நகரத் தலைவர் சித்திரை, ஐஎன்டியூசி மாவட்ட பொறுப்பாளர் சந்திரன், முன்னாள் நகரத் தலைவர் சேது பாண்டியன், வட்டார துணைத் தலைவர் புஹாரி உள்பட 17 பேர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.    அவர்களை  காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
சாத்தான்குளம், நாசரேத்தில் பாதிப்பு இல்லை: சாத்தான்குளம், நாசரேத்தில் திங்கள்கிழமை அனைத்து கடைகளும் வழக்கம் போல் திறந்திருந்தன.  பேருந்துகளும், ஆட்டோ உள்ளிட்ட இதர வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின. இதனால் இப்பகுதியில் இயல்பு நிலைமை பாதிக்கப்படவில்லை.
 

More from the section

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற பரிசீலனை

காஷ்மீரில் வீரமரணமடைந்த சுப்பிரமணியனுக்கு
சிலை, மண்டபம் அமைக்க வேண்டும்: வைகோ

தூத்துக்குடி திருநங்கை கொலை வழக்கு: விளாத்திகுளம் நீதிமன்றத்தில் இளைஞர் சரண்
தூத்துக்குடியில் ரூ. 58.65 லட்சம் நலத்திட்ட உதவி அளிப்பு
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் கருடசேவை