செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

கோவில்பட்டி அருகே 2 ஆவது நாளாக ரயில்பாதை மின் வயர் அறுந்ததால் ரயில்கள் தாமதம்

DIN | Published: 12th September 2018 09:42 AM

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் உயர் அழுத்த மின்சார வயர் அறுந்து தொங்கியதால் ரயில்கள் தாமதமாக சென்றன. 
கோவில்பட்டி பகுதியில் திங்கள்கிழமை காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில், கோவில்பட்டி ரயில் நிலையத்தை அடுத்த வேலாயுதபுரம் பகுதியில் ரயில் பாதையில் உயர்அழுத்த மின்சார வயர் அறுந்து தொங்கியது. இதனால், கோவில்பட்டி மார்க்கமாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு டீசல் என்ஜின் மூலம் இயங்கின. செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் உயர் அழுத்த மின்சார வயர்கள் சீரமைக்கப்பட்டன. 
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சென்னையிலிருந்து செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் கோவில்பட்டி ரயில் நிலையம் அருகேயுள்ள வேலாயுதபுரம் அருகே சென்றபோது, ரயில்பாதையில் உயர்அழுத்த மின்சார வயர் அறுந்து தொங்கியதாம். இதையடுத்து, ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. பிறகு டீசல் என்ஜின் மூலம் அந்த ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. 
இதைத் தொடர்ந்து, திருநெல்வேலி - ஈரோடு பயணிகள் ரயில், மைசூர் - தூத்துக்குடி விரைவு ரயில், தாம்பரம் - திருநெல்வேலி அந்தியோதயா ரயில், நாகர்கோவில் - மும்பை ரயில், திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில் ஆகிய அனைத்து ரயில்களும் செவ்வாய்க்கிழமை தாமதமாகச் சென்றன. 
சாத்தூர், மணியாச்சி, விருதுநகர் ஆகிய பகுதிகளில் இருந்து டீசல் என்ஜின் கொண்டுவரப்பட்டு, கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் சாத்தூர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மீண்டும் மின்சார ரயிலாக இயக்கப்பட்டன.  இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் வேலாயுதபுரம் அருகே  அறுந்து தொங்கிய உயர்அழுத்த மின்சார வயர் சரிசெய்யப்பட்டது. தற்போது, கோவில்பட்டி மார்க்கமாகச் செல்லும் அனைத்து ரயில்களும் வேலாயுதபுரம் அருகே மிகக் குறைந்த வேகத்திலேயே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

More from the section

ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் காயம்


ஓட்டப்பிடாரம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் இடைநீக்கம்

ஆறுமுகனேரி பகுதியில் மர்ம காய்ச்சலால் மக்கள் பாதிப்பு
பிப்.10 இல் கோவில்பட்டியில் அனைத்திந்திய எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழக மாநில மாநாடு
கயத்தாறில் ஆர்ப்பாட்டம்