வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

அரியலூரில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு

DIN | Published: 10th February 2019 03:54 AM


அரியலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளதால் மாசில்லா மாவட்டமாக அரியலூர் உருவாக்கப்படுமா என்ற சிக்கல் எழுந்துள்ளது. 
சுற்றுச்சூழல் பாதிப்பு, பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் கேரி பேக்குகள், டம்ளர், தட்டு, பிளாஸ்டிக் தாள், தெர்மகோல் தட்டு, பிளாஸ்டிக் பூசப்பட்ட தாள்கள், பைகள் போன்றவற்றிருக்கு தமிழக அரசு தடை விதித்தது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் குறித்த துண்டுப்பிரசுரங்கள் அளித்தல்,  பேரணி, விளக்கக் கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  
பிளாஸ்டிக் தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறதா என்பதை மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் ஹோட்டல்கள், பெட்டிக் கடைகள், பூக்கடை, மீன் கடை, ஸ்வீட் கடைகள், வணிக நிறுவனங்களில் தினமும் ஆய்வு மேற்கொண்டு பறிமுதல் செய்துவந்தனர். 2 ஆம் கட்ட ஆய்விலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்து அபராதம் விதித்தனர். 
இதனால் ஜனவரி மாத தொடக்கத்தில் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்த்து வந்தனர். அனைத்து ஹோட்டல்களிலும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக வாழை இலை, பாக்குமர தட்டு, டீ கடைகளில் கண்ணாடி, சில்வர் டம்ளர், வணிக நிறுவனங்களில் காகித, துணி பைகள், இறைச்சி, மீன், பூ கடைகளில் வாழை இலை, பழைய பேப்பர்கள் பயன்படுத்தப்பட்டன. இவைகளுக்கு கிராக்கி ஏற்பட்டது. 
மாவட்டத்தில் அதிகாரிகள் கெடுபிடி ஆய்வுகள் நிறுத்தப்பட்டதால்,  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை மறைத்து வைத்து, துணி பை கொண்டு வராத வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். 
குறிப்பாக அரியலூர் நகரில் பங்களா சாலை தெருவில் உள்ள ஹோட்டல், பேருந்து நிலையத்திலுள்ள தரைக் கடைகள், டீ கடைகள், திருச்சி - அரியலூர் சாலையிலுள்ள பெரும்பாலான டீ கடைகள், ஹோட்டல்கள் மட்டுமன்றி ஜயங்கொண்டம், செந்துறை, தா.பழூர், திருமானூர் ஆகிய பகுதிகளில் 
உள்ள பெரும்பாலான  கடைகளில் பிளாஸ்டிக் கவர்களில் டீ மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கி வருகின்றனர். 
இதேபோல், ஒரு சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை வெளிப்படையாக நடந்து வருகிறது. இதனால் வீதிகள், சாலைகள், குப்பை தொட்டிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகளவில் காண முடிகிறது.         சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் வணிக நிறுவனங்களில் அடிக்கடி ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்தி, பிளாஸ்டிக் மாசில்லா அரியலூர் மாவட்டம் உருவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

More from the section

ஜயங்கொண்டம் அருகே தேர்தல் புறக்கணிப்பு: வீடுகளில் கருப்புக்கொடி
பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட எஸ்.பி., ஆய்வு
பங்குனி உத்திர தேரோட்டம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு, தேரோட்டம்..
ஜயங்கொண்டம் ரயில் பாதை திட்டத்துக்கு உறுதியளிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு
அரியலூர் ஆட்சியரகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு